தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிய வந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக அதிக இடங்களில் வெற்றிக்கனியை பறிக்கும் வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் திமுகவுக்கு 35 மக்களவை தொகுதிகள் கிடைக்கும் என்றும், பாஜகவுக்கு 300க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என்றும் அந்த கருத்துக்கணிப்பில் கூறப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை நாளை மறுதினம் நடைபெற இருக்கிறது. 

இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை அனைத்து ஊடகங்களும் விவாதித்து வருகின்றன. இந்த கருத்துக் கணிப்புகள் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்தியா டுடே- ஆக்சிஸ் மை இந்தியா நாடு முழுவதும் உள்ள நாடாளுமன்ற தொகுதி வாரியாக வெற்றி வாய்ப்பு குறித்த புதிய கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளன. 

அதன்படி திமுகவுக்கு வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், பெரம்பலூர், தருமபுரி மயிலாடுதுறை, தஞ்சை, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட 20 தொகுதிகளிலும் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் திமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறும் எனவும் கூறப்படுகிறது.