உள்ளாட்சி தேர்தல் நடைபெறக் கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது என்பதை கடந்த இரண்டு வாரங்களாகவே ஆசியாநெட் தமிழ் கூறி வருகிறது, அதனை உறுதிப்படுத்தும் வகையில் திமுக தற்போது உச்சநீதிமன்றம் சென்றுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் தொகுதி மறுவரை செய்யப்படவில்லை என்று அந்த தேர்தலுக்கு உயர்நீதிமன்றத்தில் திமுக தடை பெற்றது. அதன் பிறகு தமிழகத்தில் அரங்கேறிய அரசியல் மாற்றங்களால் மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. ஆனால் நடந்து முடிந்த இடைத்தேர்தல் கொடுத்த முடிவுகளால் உற்சாகம் ஆன அதிமுக உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிக ஆர்வம் காட்டுகிறது.

ஆனால் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராக இல்லை என்று ஏற்கனவே கூறியிருந்தோம். அதற்கு காரணம் தோல்வி பயம் தான் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஏனென்றால் இடைத்தேர்தலிலேயே பட்டைய கிளப்பிய அதிமுகவினர் உள்ளாட்சித் தேர்தலை விட்டுக் கொடுக்கமாட்டார்கள். இதனால் இடைத்தேர்தலை தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும் தோல்வி அடைந்தால் ஸ்டாலின் இமேஜ் டேமேஜ் ஆகும் என்று திமுக கருதலாம்.

இதனால் தான் ஏதேதோ காரணங்களை கூறி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை திமுக எழுப்பி வந்தது. புதிய மாவட்டங்கள் உருவாகியுள்ளதால் தொகுதியை மறுவரை செய்யாமல் தேர்தலை நடத்தக்கூடாது என்று திமுக நிர்வாகிகள் கூறி வந்தனர். இந்த நிலையில் தான் உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் தொகுதி மறு வரையறை தொடர்பான வழக்கில் இன்னும் இறுதி தீர்ப்பு வழங்கப்படாத நிலையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக இவ்வாறு உச்சநீதிமன்றத்தை கடைசி நேரத்தில் நாடியுள்ளதால் அந்த கட்சி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறக் கூடாது என்பதில் எந்த அளவிற்கு உறுதியாக உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே தொகுதி வரையறை செய்யவில்லை என்று கூறி வழக்கு தொடர்ந்தது திமுக. தற்போது தொகுதி வரையறையை முடித்து தேர்தலை நடத்த அதிமுக தயாராகி வருகிறது. ஆனால் தற்போது அது தொடர்பான வழக்கை காரணம் காட்டி உச்சநீதிமன்றம் சென்றுள்ளது திமுக.