தென்காசி மாவட்டத்தின் துவக்க விழா தென்காசியில் நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போடுவதற்குத் தமிழக அரசு முயற்சி செய்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறிவருகிறார். 

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டது முதல் 1996ஆம் ஆண்டு வரை மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் முறையே இருந்துவந்தது. ஆனால், கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு 1996ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி மேயராக ஸ்டாலின் வர வேண்டும் என்பதற்காக நேரடி தேர்தல் முறை கொண்டுவரப்பட்டது.

2006ஆம் ஆண்டு அதனை மாற்றியமைத்து மறைமுகத் தேர்தலை கொண்டுவந்ததும் திமுகதான். அதற்கான தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டுவந்து விளக்கம் அளித்தவர் அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின்” என்று விமர்சித்தார்.

 “உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம். தேர்தல் நடக்க வேண்டும் என்பதில் அதிமுக அரசுக்கு மாறுபட்ட கருத்தே இல்லை. வேன்றுமென்றே தவறான தகவல்களைப் பரப்பி உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த ஸ்டாலின் முயற்சி செய்துவருகிறார்.

உள்ளாட்சித் தேர்தலை நடத்த சிலர் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்கள். எந்த முட்டுக்கட்டை போட்டாலும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது உறுதி. உச்ச நீதிமன்றம் அளிக்கும் அறிவுரையின் பேரில் மாநிலத் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தும்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.