உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு ஒதுக்கீடு பட்டியல் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நீண்ட காலமாக தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 மற்றும் 19-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால், இந்த அறிவிப்பில் எஸ்.டி. பிரிவினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கூறி தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது.

  

இதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இதுவரை 5 முறை அவர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபடத் தொடங்கியது. தற்போது, வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்ததாகவும், அடுத்த மாதம் ஜூலை 2-வது வாரத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியானது. இதை தொடர்ந்து, ஆகஸ்ட் இறுதிவாரத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

 

இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான இடஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டு அரசாணை பிறப்பித்து உள்ளது. அதாவது, உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு, அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஒதுக்கீடானது, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் மாற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, மொத்தம் உள்ள 200 வார்டுகளில் ஆண்களுக்கு 95 வார்டுகளும், பெண்களுக்கு 105 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் பொதுப்பிரிவிற்கு 79 வார்டுகளும், பொதுப்பிரிவு பெண்களுக்கு 82 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு 16 வார்டுகளும், பட்டியல் இனத்தை சேர்ந்த பெண்களுக்கு 16 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. இதில் பெண்களுக்கு 33 வார்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதேபோல் சேலம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 30 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.