2021-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் எம்.எல்.ஏ. தனியரசு வலியுறுத்தியுள்ளார்.

ஈரோட்டில் எம்.எல்.ஏ. தனியரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் பலமுறை நடத்த ஏற்பாடு செய்தும் நடைபெறவில்லை தற்போதும் கூட இது சம்பந்தமாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் அனைத்து தரப்பிலும் எழுந்துள்ளது.  

ஆகையால், அனைத்து கட்சியினருடன் ஆலோசித்து உள்ளாட்சித் தேர்தலை வரும் 2021-ம் ஆண்டு வரை ஒத்திவைப்பது நல்லது என தனியரசு கருத்து தெரிவித்துள்ளார். 

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருமே தமிழக அரசியலில் எந்தவொரு தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. இருவரும் இத்தனை ஆண்டுகளாக  எந்த ஒரு கட்சியிலும் அடிப்படை உறுப்பினராக கூட சேராமல், மக்களுக்காக எந்த ஒரு போராட்டத்திலும் பங்கேற்காமல், திடீரென அரசியலில் நுழைந்து அரியணையில் ஏற நினைப்பது மிகப் பெரிய தவறு. அவர்கள் மற்ற கட்சிகளுடன் இணைந்து செயல்படலாம் தமிழக மக்கள் இனி நடிகர் நடிகைகளை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.  அவர்களுக்கு ஒரு ஓட்டு கூட விழாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதே கருத்தை அவர் முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.