உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் திமுகவிற்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டதற்கு அந்த வழக்கறிஞர் தான் காரணம் என்று அக்கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்துள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் தேர்தலை எதிர்கொள்வது நல்லது என்று அனைத்து மூத்த நிர்வாகிகளும் ஒட்டு மொத்த மாவட்டச் செயலலாளர்களும் உறுதியுடன் பேசியதாக சொல்கிறார்கள். ஆனால் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஒரு தேர்தல் எதற்கு என்று ஸ்டாலினுக்கு ஒருவர் ஆலோசனை சொன்னதன் விளைவு தான் இந்த தர்மசங்கடத்திற்கு காரணம் என்கிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க குறைந்த அளவே வாய்ப்புகள் இருந்த நிலையில், வழக்கறிஞர் ஒருவர் கொடுத்த வாக்குறுதியை நம்பித்தான் உச்சநீதிமன்றம் செல்ல ஸ்டாலின் ஒப்புக் கொண்டதாக சொல்கிறார்கள். அந்த வழக்கறிரும் உச்சநீதிமன்றத்தில் ஒன்று நடக்க திமுக தலைமையிடம் ஒன்றை சொல்லி உள்ளாட்சித் தேர்தலுக்கு தடைகிடைத்துவிடும் என்கிற ரீதியில் நம்பிக்கையை அதிகப்படுத்தியதாக சொல்கிறார்கள்.

ஆனால் உச்சநீதிமன்றத்தில் துவக்கம் முதலே உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கு சாதகமான சூழலே நிலவியதாக சொல்கிறார்கள். புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என்று அந்த வழக்கறிஞர் சொன்னதை நம்பித்தான் திமுக முன்னணியினர் மாநில தேர்தல் ஆணையத்திடம் சென்றுள்ளனர். ஆனால் அந்த 9 மாவட்டங்களை தவிர்த்து தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதித்தது திமுக தலைமையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது-

அப்போதும் கூட அந்த வழக்கறிஞர் இல்லை நான் முழுவதும் தடை வாங்கித் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்ததாகவும் அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற உச்சநீதிமன்ற விசாரணையின் போது உள்ளாட்சித் தேர்தலை நடத்த நீதிபதிகள் அனுமதி கொடுத்துள்ளனர். ஆனாலும் கூட அந்த வழக்கறிஞர் தற்போதும், தேர்தல் நடைபெறாது என்று டிவிக்களில் பேட்டிஅளித்து வருகிறார். அந்த பேட்டியை திமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி கூட ஒளிபரப்பாதது தான் இதில் காமெடி என்கிறார்கள்.

ஸ்டாலினை சென்டிமென்டான ஒரு கேஸ் மூலம் கவர்ந்த அந்த வழக்கறிஞர் உயர்நீதிமன்றம் அளவிற்கு தான் வொர்த் என்றும் அவரை உச்சநீதிமன்றத்தில் நம்பியது திமுக செய்த மிகப்பெரிய தவறு என்றும் மூத்த வழக்கறிஞர்கள் பேச ஆரம்பித்துள்ளனர். இதனால் உச்சநீதிமன்றத்திற்கு இனி திமுக சார்பில் வேறு வழக்கறிஞர்களை தேட வாய்ப்பு இருக்கிறதாம்.