உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதத்திற்குள் தேர்தல் நடைபெறும் என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் நகராட்சி, மாநகராட்சித் தலைவர்களுக்கு மறைமுக தேர்தல் நடத்த சிறப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
 
இதனிடையே அதிமுக கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, தேமுதிக மற்றும் தமாகா ஆகியவை  தங்களுக்கு மேயர், நகராட்சி தலைவர் என பல பதவிகளை ஒதுக்கித் தருமாறு இப்போதே நிர்பந்திக்க தொடங்கிவிட்டன. இது ஆளும் அதிமுகவுக்கு பெரும் தலைவலியாக வந்து முடிந்துள்ளது. கூட்டணி சட்சிகளை சமாளிக்க முடியாமல் எடப்பாடி திணறி வருகிறார். 

இது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் தனக்கு நெருக்கமான அமைச்சர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி, ‘கூட்டணிக் கட்சிகளை அட்ஜஸ்ட் பண்ணி உள்ள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுவிடுமோ  என தான் அஞ்சுவதாக குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணி கட்சிகள் கேட்கும் அளவுக்கு ஒதுக்கீடு செய்தால் பாதி இடங்களில் கூட போட்டியிட முடியாத நிலை தான் உருவாகும் போல என வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் பேசிய அமைச்சர் ராஜேந்தி பாலாஜி, உள்ளாட்சித் தேர்தலை மனதில் கொண்டு கட்சிகள் ஆளாளுக்கு துள்ளுகிறார்கள். ஒண்ணு செய்வோம், 

எல்லா கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்தனியா நிற்போம்… அதிமுக, திமுக, காங்கிரஸ், பிஜேபி, தேமுதிக, திருமாவளவன், புதிய தமிழகம்னு எல்லா கட்சியையும் தான் சொல்றேன். எல்லா கட்சியும் தனித்தனியா நின்னு அவனவன் பலத்தைக் காட்டிக்கிட்டு பின்னர் சட்டமன்றத்துல கூட்டு சேர்ந்துடுவோம் என அதிரடியாக ஒரு கருத்தைத் தெரிவித்தார்..

அமைச்சர் ராஜேந்தி பாலாஜியின் இந்த கருத்து அவராக சொல்லவில்லை… முதலமைச்சர் எடப்பாடியின் ஆலோசனையின் பேரில் தான் அப்படி பேசியிருப்பார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

அது உண்மையாக இருந்தால் நிச்சயம் எடப்பாடி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துதான் போட்டியிட முடிவு  செய்யலாம் என கூறப்படுகிறது.