தமிழகத்தில் 3 மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் நிச்சயம் நடைபெறும். அதை எதிர்கொள்ள அதிமுக அரசு எப்போதும் தயாராக உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில் உள்ளாட்சித் தேர்தல் கண்டிப்பாக நடைபெறும். எப்பொழுது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றாலும் அதிமுக அதை சந்திக்க தயாராக இருக்கிறது. அதிமுகவை உடைக்க வேண்டும் என்று திமுக மு.க.ஸ்டாலின் சதி செய்கிறார் என்பது தற்போது அம்பலமாகிவிட்டது.  

அதுமட்டுமின்றி அவர் செல்கின்ற இடத்தில் எல்லாம் 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று சொல்கிறார்கள். 22 சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றி பெறுவோம் என்று சொன்னால் எதற்கு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறீர்கள் என முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 18 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலிலும், நடக்கப்போகின்ற 4 தொகுதி இடைத் தேர்தலிலும் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிமுகவுக்கு துரோகம் செய்து சிலர் வெளியே சென்றதால், இந்த இடைத்தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 3 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுத்தால் ஸ்டாலினுக்கு ஏன் கோபம் வருகிறது? இதன் மூலம் அந்த மூன்று எம்.எல்.ஏக்களுக்கும், திமுகவுக்கும் தொடர்பு இருப்பது தெரிகிறது. மேலும் திமுக, அமமுகவுக்கு இடையேயான உறவு வெட்ட வெளிச்சமாகியுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.