அதிமுக-பாஜக இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருவதால் இந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தல் வரை நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் மாபெரும் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். இதில், பாஜக கட்சிக்கு 5 தொகுதிகளில் போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் அதிமுகவோடு சேர்ந்து பாஜகவும் தோல்வியடைந்தது. ஆனால், அதிமுகவில் இருக்கும் முக்கிய தலைவர்கள் பாஜகவுடனான கூட்டணியே வைத்ததே தோல்விக்குக் காரணம் என்றும் கூறிவந்தனர். அதேபோல், தோல்விக்கு அமைச்சர்களே காரணம் என, பாஜக நிர்வாகிகள் குற்றம் சாட்டினர். இதனால், இருகட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அடுத்து, வேலுார் மக்களவை தேர்தல் வந்தது. அ.தி.மு.க. சார்பில் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிட்டார். பிரசாரத்திற்கு பா.ஜ.க. தலைவர்களை அதிமுக ஒதுக்கி வைத்தது. இதனால், பாஜக தலைமை கடும் கோபத்தில் இருந்து வந்தது. 

இந்நிலையில், விக்கிரவாண்டி, நாங்கநேரி தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில், நாங்குநேரியில் காங்கிரஸை எதிர்த்து போட்டியிட பாஜக விரும்பியதாக தகவல் வெளியானது. ஆனால், அ.தி.மு.க. விரும்பவில்லை. 2 தொகுதியில் அதிமுக வேட்பாளர்களை அறிவித்ததுடன் வேட்பாளர்களை அறிவித்ததுடன், தே.மு.தி.க. பா.ம.க., தலைவர்களை சந்தித்து, அமைச்சர்கள் ஆதரவு கோரினர். பா.ஜ.க.வுக்கு மாநில தலைவர் இல்லாததால் அக்கட்சியினரை சந்திக்கவில்லை என காரணம் கூறினர்.

நாங்குநேரியில் பா.ஜ.க.விற்கு கணிசமான ஓட்டுகள் உள்ளன. இதை அறிந்தும், அ.தி.மு.க. தள்ளியே இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க.விற்கு எதிரான கருத்துகளை, பா.ஜ.க. தலைவர்கள் வெளியிடத் தொடங்கினர். தங்கள் ஆதங்கத்தை பாஜக தலைமைக்கு தெரியப்படுத்தினர். உடனே, பாஜ தலைமையில் இருந்து மிரட்டலையடுத்து ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக வந்த பிரதமர் மோடியிடம் இடைத்தேர்தலில் பாஜக ஆதரவு தருமாறு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

பின்னர், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், தமிழக பா.ஜ.க. அலுவலகம் சென்று, நிர்வாகிகளை சந்தித்து, ஆதரவு கோரினார். தற்போதைக்கு பூசல் முடிவுக்கு வந்துள்ளது. எனினும், பா.ஜ.க.வுடன் அதிகம் நெருக்கம் காட்டினால், தேர்தலில் பின்னடைவு ஏற்படுமோ என்ற குழப்பத்தில் அதிமுக தொடர்ந்து இருந்து வருகிறது. 

அ.தி.மு.க. அரசு மீது, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதால் தனித்து களம் இறங்கினால், மக்கள் ஆதரவை பெற முடியும் என்ற குரல், பா.ஜ.க.வில் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது. அல்லது திமுக கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என்ற பேச்சுகள் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆகையால், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடருமா என்ற ஐயம் இரு தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ளது. அப்படி உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறினால், எடப்பாடி ஆட்சியை மத்திய அரசு உடனே கவிழ்த்துவிடும் என்பது நிதர்சனமான உண்மை.