உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்தே பாமக விஷயத்தில் திமுக இணக்கமாக நடந்து கொள்வதாகவும், உள்ளாட்சித் தேர்தலில் எதிர்கட்சி கூட்டணியை விட ஆளும் கட்சி கூட்டணி பலனுள்ளதாக இருக்கும் என்று பாமகவும் யோசிப்பதாகவும் கூறுகிறார்கள்.
உள்ளாட்சித் தேர்தலில் வட மாவட்டங்களில் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும் என்றால் கூட்டணியில் பாமக இடம் பெற வேண்டும் என்று திமுக கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டப்பேரவை தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்று மு.க.ஸ்டாலின் வெளிப்படையாகவே பேசி வருகிறார். ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல்களில் 100 சதவீத வெற்றி என்கிற இலக்கை நிச்சயம் திமுக அடைய வேண்டும் என்பது தான் ஸ்டாலினின் திட்டம் என்கிறார்கள். இதற்கு தகுந்தாற்போல் கூட்டணி வியூகம் உள்ளிட்டவற்றை வகுக்க அவர் ஆயத்தமாகி வருவதாகவும் கூறுகிறார்கள். கடந்த சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் மட்டும் அல்லாமல் வட மாவட்டங்களிலும் திமுக பெரிதும் எதிர்பார்த்த தொகுதிகளில் தோல்வியே கிடைத்தது.

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் அனைத்து தொகுதிகளையும் வென்ற நிலையில் காஞ்சிபுரத்தில் கூட ஒரு தொகுதியை அதிமுகவிடம் திமுக இழந்தது. இதே போல் வட மாவட்டங்களில் முக்கியமான தொகுதிகள் தற்போதும் அதிமுக வசமே உள்ளன. இத்தனைக்கும் அந்த தொகுதிகளில் கடந்த முறை திமுக வென்று இருந்தது. இதற்கு காரணம் கடந்த தேர்தலில் பாமக – அதிமுக கூட்டணி தான் என்று திமுக நம்புகிறது.
வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக சாதகமாக நடந்து கொண்டதை தொடர்ந்தே பாமக அந்த கட்சியுடன் கூட்டணி வைத்தது. மேலும் கூட்டணிக்காக வன்னியர்களுக்கு பத்து புள்ளி ஐந்து சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கி, அரசாணை வெளியிட்டு ஆளுநரின் ஒப்புதலை வெற்றி அதனை உடனடியாகவும் அமல்படுத்தவும் செய்தால் எடப்பாடி பழனிசாமி. இதனை அடுத்தே அதிமுக கொடுத்த தொகுதிகளை பெற்றுக் கொண்டு பாமக களம் இறங்கியது. பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை என்றாலும் வட மாவட்டங்களில் அதிமுகவிற்கு படு தோல்வி கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. இதனால் கொதித்துப்போனாலும் கூட நிதானமாக ஒரு அறிக்கை வெளியிட்டார் ராமதாஸ். அதில், வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு என்பது சட்டமாகிவிட்டது. அதனை நிறைவேற்ற வேண்டியது முதலமைச்சரின் கடமை, இல்லை என்றால் சட்டப்பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அந்த அறிக்கையில் ராமதாஸ் சுட்டிக்காட்டியிருந்தார். அடுத்த சில மணி நேரங்களிலேயே வன்னியர் தனி இடஒதுக்கீட்டை பின்பற்ற அரசாணையை வெளியிட்டது திமுக அரசு.
இந்த விவகாரத்தில் திமுகவும் சரி பாமகவும் சரி மிகவும் இணக்கமாக நடந்து கொண்டதாக கூறுகிறார்கள். இதுவே அரசியல் ரீதியிலான இணக்கத்திற்கு காரணமாக கூட அமையும் என்றும் சொல்கிறார்கள். ராமதாஸ் கேட்டதும் மு.க.ஸ்டாலின் செய்துவிட்டார் என்கிற ரீதியில் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பாக கூட ராமதாசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து கூறியிருந்தார். இதே போல் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பெற்றது தமிழகத்திற்கான வெற்றி என்று ராமதாஸ் பாராட்டியிருந்தார்.

உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்தே பாமக விஷயத்தில் திமுக இணக்கமாக நடந்து கொள்வதாகவும், உள்ளாட்சித் தேர்தலில் எதிர்கட்சி கூட்டணியை விட ஆளும் கட்சி கூட்டணி பலனுள்ளதாக இருக்கும் என்று பாமகவும் யோசிப்பதாகவும் கூறுகிறார்கள். எனவே தமிழகத்தில் கூட்டணியில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் போல் தெரிகிறது.
