உள்ளாட்சி தேர்தலை உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்படி நடத்தாமல் தேர்தலில் குளறுபடி செய்வதற்காகவே இரண்டு பழனிச்சாமியும் ஒன்று சேர்ந்துள்ளதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் விமர்சனம் செய்துள்ளார். 

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன். இவர் திமுக கூட்டணிக்கு நாடாளுமன்ற தேர்தலின் போது ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அப்போது அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.  ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த ராஜகண்ணப்பன், மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பினார். ஆனால், வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் திமுகவுக்கு அவர் ஆதரவு தெரிவித்திருந்தார். தற்போது தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. 

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளாட்சி தேர்தலுக்கான ஆதரவை தெரிவித்தார். பின்னர், செய்தியார்களுக்கு பேட்டியளித்த ராஜகண்ணப்பன் "உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி ஒன்றிய தலைவர், கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகியவற்றில் சரியான இடஒதுக்கீடு செய்யப்படவில்லை. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி நடத்தாமல் தேர்தலில் குளறுபடி செய்து அறிவிப்பு செய்துள்ள மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமியும், தமிழக முதல்வர் எடப்பாடியும் கைகோர்த்துக் கொண்டு செயல்படுவது மோசமான நடவடிக்கையாகும். 

கடந்த மக்களவை தேர்தலைவிட தமிழக ஆட்சியாளர்கள் மீதும், நிர்வாகத்தின் மீதும் பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் மாபெரும் வெற்றி பெறுவது உறுதி.

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக தலைமையிலான கூட்டணி தயாராக உள்ளது என்றார். விரைவில் முன்னாள் அதிமுக அமைச்சரான ராஜகண்ணப்பன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.