அமமுகவில் இருந்து சென்றவர்கள் எல்லாம் தளபதிகள் இல்லை என்று சசிகலாவை சந்தித்த பின் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி வரும் நிலையில் சசிகலாவை டி.டி.வி.தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது, அமமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியலை சசிகலாவிடம் அளித்து தினகரன் ஒப்புதல் பெற்றதாக கூறப்படுகிறது. தங்கதமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் அமமுகவில் இருந்து விலகிய நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. 

பெங்களூரு பரப்பன அக்ராஹார சிறையில் சசிகலாவிடம் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’’அதிமுகவிற்கு போக முடிவு எடுத்த பிறகு தான் அமமுகவில் இருந்து இசக்கி சுப்பையா விலகி உள்ளார். அமமுகவில் இருந்து விலக முடிவு எடுத்த பின்பு என்னை குறை சொல்கின்றனர். அமமுகவில் இருந்து சென்றவர்கள் எல்லாம் தளபதிகள் இல்லை. அவர்கள் நிர்வாகிகள் தான். அவர்கள் போனதால் கவலை இல்லை. தொண்டர்கள் எங்களிடம் தான் இருக்கிறார்கள்’’ என அவர் தெரிவித்தார். 

புதிய நிர்வாகிகள் பட்டியலில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அரசியல் கட்சியாக அமமுகவை பதிவு செய்ய வேண்டியுள்ளதால் மாநில, மாவட்ட அளவில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.