குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது போலவே துணை ஜனாதிபதி தேர்தலிலும் வெற்றி பெறும் எனவும் காரணம், அவர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம் எனவும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

குடியரசு தலைவருக்கான தேர்தல் கடந்த 17 ஆம் தேதி நடைபெற்றது. இதில் பாஜக வேட்பாளராக ராம்நாத் கோவிந்தும், எதிர்கட்சி வேட்பாளராக மீராக்குமாரும் போட்டியிட்டனர்.

இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 11 மணிக்கு தொடங்கி மாலை முடிவடைந்தது.

இந்த வாக்கு எண்ணிக்கையில் மீராக்குமாரை விட ராம்நாத் கோவிந்த் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதனைதொடர்ந்து அடுத்த மாதம் துணை குடியரசு தலைவருக்கான தேர்தலும்  நடக்கவிருக்கிறது.

இதில் பாஜக வேட்பாளராக வெங்கையா நாயுடுவும் எதிர்கட்சி வேட்பாளராக கோபால கிருஷ்ண காந்தியும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது போலவே துணை ஜனாதிபதி தேர்தலிலும் வெற்றி பெறும் எனவும் காரணம், அவர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம் எனவும் தெரிவித்தார்.

அரசியலில் வெற்றி தோல்வி சகஜம் எனவும், குடியரசு தலைவர் தேர்தலில் வழக்கமாக காங்கிரஸ் வெற்றி பெறும் இந்தமுறை பாஜக வெற்றி பெற்றுள்ளது என தெரிவித்தார்.