அலிபாபா குகை போல், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர்களுக்கு மட்டுமே டெண்டர் திறக்கும் என்று திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்தார்.
'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வரும் திமுக எம்.பி.யும் அக்கட்சியின் மகளிரணி செயலாளருமான கனிமொழி, சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார். திருப்பத்தூரில் மக்கள் மத்தியில் அவர் பேசுகையில், “மத்தியில் உள்ள பாஜக அரசு விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து வருகிறது. இங்கே உள்ள அதிமுக அரசு பெண்களை பாதுகாக்க தவறிவிட்டது. இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பு என்பது வெறும் கனவாகவே மாறிவிட்டது.

100 நாள் வேலைத் திட்டத்தில் ரூ. 400 கோடி அளவுக்கு மெகா ஊழல் நடைபெற்றுள்ளது. திமுக கொண்டுவந்த அனைத்து திட்டங்களும் முற்றிலுமாக முடக்கப்பட்டுவிட்டன. ஆட்சிக்கு வந்தவுடன் மதுபான கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்ற வாக்குறுதி மீது எந்த ஒரு நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. இன்னும் 3 மாதங்கள்தான் உள்ளன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு அனைத்து தேவைகளும் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

