Lets talk about investment not about to bargain
கூகுள் தலைவர் சுந்தர் பிச்சைஇடம் தொழில் முதலீடு பற்றி பேசுங்க... பேரம் பேசாதீங்க என அதிமுக அமைச்சர் மணிகண்டனை ட்விட்டரில் கிண்டலடித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
நாட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கு தனது அறிக்கை மூலமாக கண்டனம் தெரிவிப்பதும், அரசியல், கல்வி, சமூக அக்கறையுள்ள விஷயங்களை தனது சமூக வலைதள பக்கமான ட்விட்டரில் நேரடியாக தனது எதிர்ப்பினை பதிவு செய்வார். பொருளாதாரம் சம்பந்தமான விஷயங்களை புள்ளிவிவரமாக மக்களுக்கு சொல்வதில் வல்லவரான பாமக நிறுவனர் ராமதாஸ், சோசியல் மீடியா வாயிலாக தனக்கே உரிய பாணியில் இளைஞர்களுக்கு நிகராக கலாய்ப்பதில் கைதேர்ந்தவர்.
இந்நிலையில் சென்னை அல்லது மதுரையில் கூகுள் நிறுவனத்தின் கிளை அமைக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாக அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனம் என்பது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயற்படும் ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆகும். 1998ல் லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகியோரால் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தின் முதல் பொதுப்பங்கு 2004 ஆம் ஆண்டு வெளிப்பட்டது.
இந்நிறுவனம் 2006 ஆம் ஆண்டு மவுண்டன் வியூ, கலிபோர்னியாவிற்கு தனது தலைமையகத்தை மாற்றியது. மேலும் ஒரு நாளில் பில்லியனுக்கும் மேலான தேடல்களை கூகுள் நிறுவனம் கையாள்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.
மென்பொருள் பொறியியல், இணைய முன்னேற்றங்கள், தொழில்நுட்ப பிரச்னைகளைக் கையாள்வது, போன்ற பல்வேறு வேலைவாய்ப்புகளை கூகுள் வழங்கி வரும் நிலையில் சட்டசபையில் இதுகுறித்து திமுக உறுப்பினர் பெரியசாமி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், மதுரை அல்லது சென்னையில் கூகுள் நிறுவன கிளை தொடங்க கூகுள் தலைவர் சுந்தர் பிச்சையை தொழில் முதலீடு பற்றி சந்தித்து பேசுவேன் என தெரிவித்திருந்தார்.
அமைச்சர் மணிகண்டனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக " கூகுள் தலைவர் சுந்தர் பிச்சையை தொழில் முதலீடு பற்றி சந்தித்து பேசுவேன்: அமைச்சர் மணி கண்டன் - முதலீடு பற்றி பேசுங்க... பேரம் பேசாதீங்க! என தனக்கே உரிய பாணியில் ட்விட்டரில் கிண்டலாக ட்விட்டியுள்ளார்.
