திமுக தலைவர் கருணாநிதி எதிரிகளை வென்றதைப்போலவே எமனையும் வெல்வார் என லியோனி தெரிவித்துள்ளார். 

திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்றிரவு அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும் தொடர் சிகிச்சையின் விளைவாக அவரது உடல்நிலை சீராகிவருவதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. உடல்நிலையில் பின்னடைவு என்றதும் மனமுடைந்த தொண்டர்கள், சிகிச்சைக்கு பின்னர் உடல்நிலை சீரடைந்தது என்றதும் சற்று ஆறுதல் அடைந்தனர். விடிய விடிய காத்திருந்த தொண்டர்கள், அதிகாலையில் சற்று கலைந்து சென்றனர். மீண்டும் காலை முதல் ஏராளமானோர் திரண்டுள்ளனர். 

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பிரபலங்களும் காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்த வண்ணம் உள்ளனர். இன்று காலை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், கருப்பண்ணன் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நலத்தை விசாரித்தனர். 

வைகோ, முத்தரசன், பீட்டர் அல்போன்ஸ்(காங்கிரஸ்), சரத்குமார் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் சிவக்குமார் மற்றும் சூர்யா ஆகியோரும் காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் விசாரித்தனர். 

திமுகவை சேர்ந்த லியோனியும் காவேரி மருத்துவமனைக்கு சென்று ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்துவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சந்திரகிரகணம் எப்படி சூரியனை சிறிது நேரம் மறைத்து விட்டு விலகியதோ அது போலவே கருணாநிதிக்கு ஏற்பட்ட சிறிது உடல் நலப்பின்னடைவு தற்போது நீங்கிவிட்டது என தெரிவித்தார். 

மேலும் எதிரிகளை எல்லாம் எப்படி வென்றாரோ அதேபோலவே எமனையும் கருணாநிதி வெல்வார் என நம்பிக்கை தெரிவித்த லியோனி, தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம்; கருணாநிதி மீண்டு வருவார் என தெரிவித்தார்.