திருப்போரூரில் திமுக எம்எல்ஏ நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் வட இந்திய ரியல் எஸ்டேட் மாஃபியா ஸ்டைலில் இருந்ததாக கூறி பகீர் கிளப்புகின்றனர் வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகள்.

செங்கல்பட்டு மாவட்டம் செங்காடு அருகே அமமுக பிரமுகர் குமார் என்பவர் வாங்கிய 350 ஏக்கர் நிலம் தான் தற்போது தமிழக அரசியலையே தகிதகிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த 350 ஏக்கர் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி விற்றால் கொளுத்த லாபம் பார்க்கலாம் என்று அந்த நிலத்தை வாங்கியுள்ளார் குமார். அதுவும் மிக சொற்பவிலைக்கு அந்த நிலம் கைமாறியுள்ளது. இதற்கு காரணம் அந்த நிலம் ஹாட் கேக்காக இருந்தாலும் அங்கு செல்வதற்கு முறையான பாதை கிடையாது. ஆனால் அருகே உள்ள ஒரு கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் சாலை அமைத்தால் அந்த 350 ஏக்கர் நிலத்தை பணம் கொட்டும் தங்கச் சுரங்கமாக்கிவிடலாம்.

அமமுக பிரமுகர் குமாரின் அண்ணன் தட்சனாமூர்த்தி அதிமுக பிரமுகர். அவர் மூலமாக கோவில் நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்துவிடலாம் நடப்பது நம்ம ஆட்சி என்கிற எண்ணத்தில் துணிச்சலாக அந்த இடத்தை வாங்கியுள்ளார் அமமுக பிரமுகர் குமார். நிலத்தை வாங்கிய சூட்டோடு செங்காடு கிராம பெரியவர்கள் உதவியுடன் அங்கு சாலை அமைத்து தனது நிலத்திற்கு வழி ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் குமார். ஆனால் சிலர் அதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளனர். சாலை அமைக்கவில்லை என்றால் 350 ஏக்கர் நிலத்தை ஒன்றும் செய்ய முடியாது என்பதால் குமாரிடம் இருந்து பெரும் தொகையை சிலர் எதிர்பார்த்துள்ளதாக கூறுகிறார்கள்.

நிலத்தை வாங்கிய குமாருக்கு எம்எல்ஏ இதயவர்மன் ஒரு வகையில் உறவினர். ஆனால் அவர்களுக்கு இடையே நீண்ட காலமாக பகை உள்ளதாக சொல்கிறார்கள். மேலும் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைப்பதாக குமாருக்கு எதிராக எம்எல்ஏ இதயவர்மன் தூண்டிவிட்டதாகவும் சொல்கிறார்கள். ஆனால் தனது அண்ணனான அதிமுக பிரமுகர் தட்சினாமூர்த்தியின் துணையுடன் சாலை அமைக்கும் பணிகளில் மறைமுகமாக குமார் தீவிரம் காட்டி வந்துள்ளார். இதனை அறிந்த திமுக எம்எல்ஏ இதயவர்மனின் ஆதரவாளர்கள் குமாருக்கு சொந்தமான இடத்தில் இறங்கி கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவில் நிலத்தை நீ ஆக்கிரமித்தால் உன் இடத்தை கோவில் ஆக்கிரமிக்கும் என்று ஊர் மக்களை குமாருக்கு எதிராக திமுக எம்எல்ஏ ஆதரவாளர்கள் தூண்டிவிட்டதாக சொல்கிறார்கள். தனது பட்டா இடத்தில் திமுக எம்எல்ஏ ஆதரவாளர்கள் கால்வாய் அமைப்பதை பார்த்து கொதித்து எழுந்த குமார் அங்கு கடந்த 10ந் தேதி தனது ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார். அப்போது மோதல் ஏற்பட்ட நிலையில் உடனடியாக காவல் நிலையம் சென்று தன்னுடைய இடத்தில் தன்னுடைய அனுமதி இல்லாமல் திமுக எம்எல்ஏ இதயவர்மன், அவரது தந்தை லட்சுமிபதி உள்ளிட்டோர் மீது குமார் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக போலீசார் உடனடியாக சென்று விசாரணை நடத்தி இரு தரப்பினரையும் அங்கிருந்து கலைந்து போகச் செய்துள்ளனர். இந்த நிலையில் மறுநாள் சென்னையில் இருந்து பிரபல ரவுடி ஒருவர் உள்ளிட்ட அவரது கையாட்கள் சுமார் 50 பேருடன் செங்காடு வந்துள்ளார் குமார். அப்போது ஏற்பட்ட மோதலின் போது தான் எம்எல்ஏ இதயவர்மன், அவரது தந்தை லட்சுமிபதி ஆகியோர் துப்பாக்கியால் சுட்டு விஷயம் விஸ்வரூபம் எடுத்தது. திமுக எம்எல்ஏ துப்பாக்கியை பயன்படுத்தும் அளவிற்கு இந்த விஷயம் ஏன் இவ்வளவு சீரியசானது, கோவில் நிலத்தை காக்க இந்த அளவிற்கா திமுக எம்எல்ஏ தனது அரசியல் வாழ்வை அடமானம் வைப்பார் என்கிற கேள்வி எழுந்தது.

இது குறித்து சர்ச்சைக்குரிய பகுதியில் நிலம் வாங்கிய குமார் தரப்பிடம் விசாரித்த போது தான் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. திமுக எம்எல்ஏ இதயவர்மனும் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகவும் பெரும்பாலும் இடத்தை அடையாம் கண்டுபிடித்து பெரிய பெரிய பார்ட்டிகளுடன் பேரம் பேசி மாற்றிவிட்டு கமிசன் வாங்குவது தான் இதயவர்மனின் ரியல் எஸ்டேட் ஸ்டைல் என்கிறார்கள். பெரிய அளவில் முதலீடுகள் எதுவும் செய்யாமல் விற்பவருக்கும் வாங்குபவருக்கும் டீலராக மட்டும் செயல்பட்டு கல்லா கட்டி வந்தவர் இதயவர்மன் என்று குமார் தரப்பினர் கூறுகின்றனர்.

இதே பாணியில் குமார் வாங்கிய 350 ஏக்கர் நிலத்தை மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றுக்கு கைமாற்றிவிடும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது கோவில் நிலப்பிரச்சனை வந்த நிலையில் நடைபெற்ற கட்டப்பஞ்சாயத்தில் தங்களுக்கு ஒரு பெருந்தொகை வேண்டும் என்று திமுக எம்எல்ஏ தரப்பு பேரம் பேசியதாக சொல்கிறார்கள். அதற்கு குமார், கொடுக்க மறுக்கவே பிரச்சனை வெடித்ததாக சொல்கிறார்கள். மேலும் திமுக எம்எல்ஏ எதிர்ப்பை பொருட்படுத்தாமல் சாலை அமைப்பது உறுதி என்று சவால்விட்டு குமார் சென்றதாகவும், மேலும் ரவுடிகளுடன் செங்காடு வர இருப்பதாகவும் தகவல் கிடைத்த நிலையில் அதனை எப்படியாவது தடுக்க வேண்டும் என்றே திமுக எம்எல்ஏ இதயவர்மன் மற்றும் அவரது தந்தை லட்சுமிபதி அங்கு சென்றதாகவும் குமார் தரப்பினர் கூறுகின்றனர்.

பீகார், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தான் நில விவகாரங்களில் தலையிடும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் துப்பாக்கியை பயன்படுத்தி எதிரிகளை மிரட்டுவார்கள் என்றும் தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கட்டப்பஞ்சாயத்திற்கு துப்பாக்கியை பயன்படுத்தியிருப்பது இதுவே முதல் முறை என்றும் போலீஸ் தரப்பில் கூறுகிறார்கள். மேலும் இதயவர்மன் பின்னணியை விசாரிக்கும் போது அவரது ரியல் எஸ்டேட் டீலிங்குகள் மாஃபியா ஸ்டைலில் இருப்பதாகவும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு யாரேனும் உள்ளனரான என்று விசாரணை நடைபெற்று வருவதாகவும் வழக்கை விசாரிக்கும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.