சசிகலா புஷ்பா எம்.பி.க்கு எதிராக புகார் கொடுத்த இளம் பெண்களுக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர் சுகந்தி ஜேசன் வீட்டை மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர்.

எம்.பி. சசிகலா புஷ்பா, கட்சி தலைமைக்கு எதிராக பாராளுமன்றத்தில் புகார் கூறிதை அடுத்து கட்சி தலைமை அவரை அதிரடியாக நீக்கியது. இதனை அடுத்து எம்.பி. சசிகலா எம்.பி. மீது பல்வேறு புகார்கள் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டன.

சசிகலா புஷ்பா வீட்டில் வேலை செய்த இளம் பெண்கள், தங்கள் மீது பாலியல் தொல்லை தருவதாகவும், டார்ச்சரை அனுபவித்து வருவதாகவும் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதேபோல், சசிகலா புஷ்பா மீது பண மோசடி புகாரும் கொடுக்கப்பட்டிருந்தது.
சசிகலா புஷ்பா மீதான வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இளம் பெண்கள் பானுமதி, ஜான்சிராணி சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான, வழக்கறிஞர் சுகந்தி ஜேசன் வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர்கள் டி.வி. மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.

வழக்கறிஞர் சுகந்தி ஜேசன், தனது குடும்பத்துடன் கொச்சின் சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள், அவரின் வீட்டுக்குள் புகுந்துள்ளனர். வீட்டு உபயோகப் பொருட்களை சேதப்படுத்தியது மட்டுமல்லாமல் ஜன்னல் கண்ணாடிகள், காரை கண்ணாடிகளையும் அடித்து உடைத்துள்ளனர்.

கொச்சின் சென்றிருந்த சுகந்தி ஜேசனுக்கு இந்த சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் அங்கு வந்த சுகந்தி, இது குறித்து போலீசில் புகார் தெரிவித்தார்.
