ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையனை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள வேட்டைக்காரன்கோயில் பகுதியில் சீரான முறையில் குடிநீர் விநியோகிப்பதில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆவேசமடைந்த பெண்கள் காலிக்குடங்களுடன் போராட்டம் நடத்தி கொண்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக அமைச்சர் செங்கோட்டையன் தனது காரில் வந்தார்.

இதனைப் பார்த்ததும் செங்கோட்டையனின் காரை முற்றுகையிட்ட பெண்கள், குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணச் சொல்லி முழக்கங்களை எழுப்பினர். 

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டதால் பதறிப் போன செங்கோட்டையன், தொலைபேசியில் அதிகாரிகளை அழைத்து போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் குறைகளை தீர்க்குமாறு உத்தரவிட்டார். ஆனால் இதனை ஏற்காத பெண்கள் தொடர்ந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து அங்குவிரைந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி மொழி அளித்ததைத் தொடர்ந்து பெண்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். 

சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி அமைச்சர் செங்கோட்டையனை பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்ட சம்பவம் கோபிச்செட்டி பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.