தமிழக பாஜக தலைவராக யாரும் எதிர்பார்க்காத வகையில் நியமிக்கப்பட்டுள்ள முருகன் ஒரு அரசியல் கட்சி பிரமுகர் போல இல்லாமல் ஒரு அதிகாரி ஸ்டைலில் நிர்வாகத்தை மேற்கொண்டு வருவதால் அடுத்தடுத்து பலர் அந்த கட்சியில் இணைந்து வருகின்றனர்.

தமிழக பாஜகவை பொறுத்தவரை யாரும் எதிர்பாராத வகையில் தலைவர்களை நியமிப்பது வழக்கம். 2009ம் ஆண்டு பொன்.ராதாகிருஷ்ணன் பாஜக தலைவரானார். இதே போல் 2014ல் தமிழிசை சவுந்திரராஜன் பாஜக தலைவரானார். இந்த இரண்டு பேருமே அப்போது பாஜக தலைவர் ஆக வாய்ப்பு மிக மிக குறைவாகவே இருந்தது. 2009ம் ஆண்டாக இருந்தாலும் சரி 2014ம் ஆண்டாக இருந்தாலும் சரி தமிழக பாஜக தலைவர்கள் ரேசில் எச்.ராஜா போன்றோர் தான் இருந்தனர். ஆனால் அதனை எல்லாம் மீறி பொன்னார், தமிழிசை பாஜக தலைவர்கள் ஆகினர். அதேபோலத்தான் முருகனை பாஜக தலைவராகியுள்ளது அக்கட்சியின் மேலிடம்.

தமிழிசை, பொன்னார் கூட சென்னையில் அரசியல் பழகியவர்கள், பாஜகவின் தலைமையகமாமக கமலாலயம் சென்று வருபவர்கள். ஆனால் முருகன் அப்படி இல்லை. பாஜகவில் இருந்தாலும் கூட மேலிட தொடர்புகள் மூலம் அக்கட்சியின் வழக்கறிஞர், மத்திய அரசின் வழக்கறிஞர், தாழ்த்தப்பட்டோர் ஆணையம் போன்றவற்றில் பணியாற்றியவர். இப்படிப்பட்ட சூழலில் பாஜக தலைவராக பொறுப்பேற்ற உடன் கமலாலயம் வந்தவர் அன்று முதலே தனது பணியை தொடங்கியதாக சொல்கிறார்கள். எதிர்பார்த்ததை போலவே கட்சியின் மற்ற தலைவர்களிடம் இருந்து முருகனுக்கு பெரிய அளவில் ஒத்துழைப்பு இல்லை.

ஆனாலும் கூட தலைவர்களை நேரடியாக சென்று சந்தித்து அவர்களுடன் சுமூகமான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார். இருந்தாலும் கூட சில தலைவர்கள் முருகன் அழைத்தும் கூட கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. முருகன் தலைவராக பதவியேற்ற பிறகு கமலாலயம் வருவதை பொன்.ராதாகிருஷ்ணன் கூட குறைத்துக் கொண்டார. அதற்கு முன்பு வரை பொன்.ராதாகிருஷ்ணன் கமலாலயத்தில் இருந்த ஒரு அறையில் தான் தங்கி வந்தார். முருகன் தலைவராகும் முன்னரே பொன்னார் அந்த அறையை காலி செய்துவிட்டாலும் கூட அதிகம் அந்தப்பக்கம் வராமல் கன்னியாகுமரியிலேயே இருப்பதாக சொல்கிறார்கள்.

இதே போல் பாஜக தலைவர்கள் பலரும் ஒதுங்கிய நிலையிலும் தன்னுடன் இருப்பவர்களை மட்டும் வைத்துக் கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறார் முருகன். அதிலும் திமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்த வி.பி.துரைசாமியை பாஜகவிற்கு அழைத்து வந்தது முருகனின் மிகப்பெரிய மாஸ்டர் ஸ்ட்ரோக் என்கிறார்கள். இதே போல் திமுக ஆதரவாளராக இருந்து வந்த பிரபல வழக்கறிஞர் பால். கனகராஜூம் பாஜகவில் இணைந்துள்ளார். இதிலும் முருகன் தான் முக்கிய பங்காற்றியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகன் வழக்கறிஞராக இருந்த போது கனகராஜூக்கு மிகவும் நெருக்கம் என்கிறார்கள்.

சென்னை வழக்கறிஞர்கள் மத்தியில் கனகராஜூக்கு என்று பெரிய செல்வாக்கு உண்டு. இதன் மூலம் தமிழக பாஜகவின் சட்ட நடவடிக்கைகளுக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இப்படி பெரிய தலைகளை பாஜகவிற்கு இழுத்து வருவதுடன் தொண்டர்கள் எண்ணிக்கையையும் அவ்வப்போது முருகன் கிராஸ் செக் செய்து வருகிறார். இதற்கு முன்பு வரை பாஜக தொண்டர்கள், உறுப்பினர்கள் என்று கொடுக்கப்பட்டுள்ள எண்ணிக்கையை அவர் சரிபார்த்து வருவதாக சொல்கிறார்கள். இதில் பெரும்பாலும் தவறான தகவல்களே இருப்பதால் அதனை எல்லாம் நீக்விட்டு பாஜகவிற்கு உண்மையில் தமிழகத்தில் எத்தனை உறுப்பினர்கள் என்பதை கணக்கிடும் பணியில் அவர் ஆர்வம் காட்டுவதாகவும் கூடுதலாக தொண்டர்களை சேர்க்க வேண்டும் என்பது தான் தற்போது அவர் இலக்கு என்கிறார்கள்.

இந்த விஷயங்களில் எல்லாம் நிர்வாகிகளிடம் போதிய ஒத்துழைப்பு இல்லை என்றாலும் தனி ஆளாக முயன்று வரும் முருகனுக்கு என்று தனியாக ஆதரவாளர்கள் பாஜகவில் உருவாகி வரும் அளவிற்கு அவர் பணிகள் இருப்பது தான் கமலலாயத்தின் லேட்டஸ்ட் ஹாட் டாபிக்.