சாதாரண விற்பனையாளராக வாழ்க்கையை தொடங்கி வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் தலைவராக உயர்ந்தவர் என்றும், வெற்றி படிகட்டு புத்தகத்தின் மூலம், மற்றும் சுய முன்னேற்றம் வழிகாட்டும் தொடர் மூலம் இளைஞர்களை வழி நடத்தியவர் வசந்தகுமார் என தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மறைந்த வசந்தகுமாருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இறங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:- 

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினரும், வசந்த் அண்ட் கோ குழுமத்தின் தலைவருமான திரு.எஸ்.வசந்தகுமார் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் குணமடைந்து வருகிறார் என்ற செய்தி ஆறுதலைத் தந்தது. ஆனால் இன்று அவர் உயிர் பிரிந்துவிட்டது, அமைதியான பேச்சு, சிரித்த முகம், இவற்றிற்கு சொந்தக்காரர் திரு.வசந்த குமார் அவர்கள் விற்பனையாளராக தனது வாழ்க்கையை தொடங்கி படிப்படியாக உயர்ந்து வசந்த் அண்ட் கோ மற்றும் வசந்த் தொலைக்காட்சியில் நிறுவனத் தலைவராக உயர்ந்தவர். 

வெற்றி படிகட்டு புத்தகத்தின் மூலம் வசந்த் தொலைக்காட்சியில் அவரது சுயமுன்னேற்றம் வழிகாட்டும் தொடர் மூலம் இளைஞர்களை வழி நடத்தியவர், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், தற்போது பாராளுமன்ற உறுப்பினராகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராகவும் விளங்கினார். அரசியலில் தடம் பதித்த அவரது மறைவு தமிழகத்திற்கும் தமிழக அரசியலுக்கும் பேரிழப்பாகும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் கட்சியின் தொண்டர்கள் அனைவருக்கும், எனது சார்பிலும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என அந்த இரங்கல் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.