K.Wulusamy is appointed as RKNagar election officer.

ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக கே.வேலுசாமியை நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

கடந்த முறை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்தபோது, எடப்பாடி தரப்பில் இருந்து டிடிவி தினகரன் வேட்பாளராக களமிறங்கினார். 

ஒபிஎஸ் தரப்பில் இருந்து அவைத்தலைவர் மதுசூதனன் வேட்பாளராக களமிறங்கினார். தேர்தல் அறிவிப்பு வந்ததும் ஆர்.கே.நகர் முழுவதும் பணபட்டுவாடா தொகுதியாக மாறிவிட்டது. 

இதுகுறித்து வீடியோ உட்பட பணபட்டுவாடா செய்ததற்கான பல்வேறு ஆதாரங்கள் தேர்தல் ஆணையத்தில் குவிந்த வண்ணம் இருந்தன. 

இதனால் பல்வேறு புகார்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்தது. 

இதைதொடர்ந்து ஜெயலலிதா காலமானதால் காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் டிசம்பர் 31-ம்தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வந்தது. 

இந்நிலையில், ஆர்.கே. நகர் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரியாக ஆதிதிராவிட இணை இயக்குனர் கே.வேலுசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

உதவி தேர்தல் அதிகாரியாக தண்டையார்பேட்டை வட்டாட்சியர் முருகேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

மற்றொரு உதவி தேர்தல் அதிகாரியாக சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் சுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

மேலும் ஆர்.கே.நகரில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரம் செய்யக்கூடாது எனவும் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.