சென்னையைப் போலவே கும்பகோணம் தொகுதி திமுகவின் கோட்டையாக விளங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் 2021 வரை நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுகவே தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்திருக்கிறது.
கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது. இதுபோல நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் பெரும்பான்மையாக திமுக கூட்டணியே வென்றது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பதவிகளை மறைமுகமாகத் தேர்வு செய்யும் தேர்தல் மார்ச் 4 அன்று நடைபெற உள்ளது. இதற்கிடையே மேயர், நகராட்சி, பேரூராட்சி சேர்மன் பதவிகளை பங்கீடு செய்வது தொடர்பாக திமுக தங்களுடைய கூட்டணி கட்சிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. சீனியர் அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ.வேலு ஆகியோர் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் மதிமுகவுக்கு ஆவடி மாநகராட்சியில் துணை மேயர் பதவியும், விசிகவுக்கு கடலூர் மாநகராட்சியில் துணை மேயர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக உருவாக்கப்பட்ட கும்பகோணம் மாநகராட்சியின் மேயர் பதவியும், சேலம் மாநகராட்சியில் துணை மேயர் பதவியும், சென்னை மாநகராட்சியில் ஒரு மண்டலத் தலைவர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாயின. கும்பகோணம் மாநகராட்சி ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியானதும் காங்கிரஸ் கட்சியினர் கும்பகோணத்தில் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

ஆனால், இந்த தகவலால் திமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சென்னையைப் போலவே கும்பகோணம் தொகுதி திமுகவின் கோட்டையாக விளங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் 2021 வரை நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுகவே தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்திருக்கிறது. 1991-இல் நடந்த தேர்தலில் மட்டுமே திமுக தோல்வியடைந்தது. தற்போது கும்பகோணம் திமுக எம்.எல்.ஏ.வாக இருக்கும் அன்பழகன் 2011, 2016, 2021 என ஹாட்ரிக் வெற்றி பெற்றவர். இப்படி திமுகவின் கோட்டையாக இருக்கும் கும்பகோணத்தில் முதல் மாநகராட்சி மேயர் பதவி திமுகவுக்கு ஒதுக்கப்படும் என்றே திமுகவினர் எதிர்பார்த்தனர்.

ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் தகவலால் திமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக அதிர்ச்சியடைந்த திமுக எம்.எல்.ஏ. அன்பழகன், உடனடியாக சென்னை புறப்பட்டதாகவும் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலினிடம் எப்படியும் பேசி, அந்த முடிவை மாற்றுவதாக உள்ளூர் திமுகவினரிடம் உறுதியளித்துவிட்டு கிளம்பியிருப்பதாகவும் கும்பகோண திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
