தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது தந்தை குமரி ஆனந்தனிடம் ஆசிர்வாதம் பெற்றார்.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் மகள் தமிழிசை சவுந்தரராஜன். கவர்னராக நியமிக்கப்பட்டிருப்பது பற்றி குமரி அனந்தன் கூறுகையில், ‘தமிழிசை உழைப்பாலும், ஆற்றலாலும் உயர்வு பெற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை.’’ எனக் கூறினார். 

ஆரம்ப காலத்தில் அவரது தந்தை குமரி அனந்தன் பாதயாத்திரை மேற்கொண்டபோது, ஒரு மருத்துவராக தன் தந்தையை அவர் கவனித்து கொண்டார் தமிழிசை. அடிப்படையில் ஒரு பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து வந்த அவர் பாஜகவில் எதிர்பாராவிதமாக தன்னை இணைத்து கொண்டார். தமிழகத்தில் பிரபலமாகாத பாஜகவை அவர் தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் பிரபலப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டார். அவரது தந்தையின் தமிழ் ஆளுமை இவருக்கும் உண்டு. எதுகை, மோனை நடையில் உரையாடுவது, சிறந்த உச்சரிப்பு நடை போன்றவற்றால் அவரது பேச்சு பலரையும் ஈர்த்தது.

கடுமையான விமர்சனங்கள், தனி நபர் தாக்குதல்கள் போன்றவற்றை கண்டு அவர் அஞ்சியதில்லை. பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸில் பெரிய பின்னணி இல்லாத நிலையில் அவரின் வளர்ச்சி மற்றும் அண்மைய ஆளுநர் நியமனம் அசாதாரணமான ஒன்று.