Asianet News TamilAsianet News Tamil

போதுண்டா சாமி.. 8 ஆண்டுகளே தாங்க முடியல இதுல வேற 80 ஆண்டுகளா? அண்ணாமலையை கிழித்து தொங்கவிடும் KS.அழகிரி.!

எந்த பிரச்சினையை கையில் எடுத்தாலும் கையை சுட்டுக் கொள்கிற அண்ணாமலை, இந்த பிரச்சினையை மிகப்பெரிய வெற்றியாக  நினைத்து புளகாங்கிதம் அடைகிறார். தமிழக அரசை பொறுத்தவரை, மடியில் கனம் இல்லாததால் சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறது. 

KS Alagiri Slams Annamalai
Author
Tamil Nadu, First Published Feb 16, 2022, 10:50 AM IST | Last Updated Feb 16, 2022, 10:50 AM IST

தமிழக மக்களின் நலனிற்கு விரோதமாக செயல்படுகிற அண்ணாமலை, எந்தப் பிரச்சினையை கையில் எடுத்தாலும் எந்தவித பலனும் கிடைக்காமல் அவருக்கு எதிராகவே போய்க் கொண்டிருக்கிறது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க தடையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இவ்வழக்கை பொறுத்தவரை, தற்கொலை நிகழ்ந்தவுடனே தமிழக காவல்துறையின் சி.பி.சி.ஐ.டி. சரியான திசையில் விசாரணையை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தமிழக அரசின் கருத்தை முழுமையாக அறியாமல் நீதிபதி ஜி.ஆர். சுப்பிரமணியம் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க ஆணையிட்டார். 

KS Alagiri Slams Annamalai

இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது. இந்த உத்தரவு தமிழக பா.ஜ.க.விற்கு கிடைத்த வெற்றியாகக் கருதி அண்ணாமலை  மகிழ்ச்சிக் கடலில் நீந்த முற்பட்டிருக்கிறார். எந்த பிரச்சினையை கையில் எடுத்தாலும் கையை சுட்டுக் கொள்கிற அண்ணாமலை, இந்த பிரச்சினையை மிகப்பெரிய வெற்றியாக  நினைத்து புளகாங்கிதம் அடைகிறார். தமிழக அரசை பொறுத்தவரை, மடியில் கனம் இல்லாததால் சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறது. வழக்கில் உண்மை வெளியே வர வேண்டும். தமிழக அரசின் சி.பி.சி.ஐ.டி. விசாரித்தாலும், சி.பி.ஐ. விசாரித்தாலும் உண்மைநிலை வெளிப்பட வேண்டும். இதில் பா.ஜ.க. மகிழ்ச்சியடைய என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.

KS Alagiri Slams Annamalai

சமீபத்தில் பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அதற்குப் பிறகும் இதில் மிகப்பெரிய சதி நடந்திருப்பதாக அண்ணாமலையும், மற்றவர்களும் கற்பனைகளை நாள்தோறும் அவிழ்த்து விடுகிறார்கள். இதை வைத்துக் கொண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடலாம் என பா.ஜ.க. கனவு காண்கிறது. ஆனால், மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் எத்தகைய படுதோல்வியை தமிழக மக்கள் பா.ஜ.க., அ.தி.மு.க.விற்கு வழங்கினார்களோ, அதைவிட கூடுதலான தோல்வியை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும்; வழங்கப் போவது உறுதி. இதன்மூலம் உரிய பாடத்தை பா.ஜ.க., அ.தி.மு.க. பெறப் போகிறது.

KS Alagiri Slams Annamalai

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும், தமிழக முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட பா.ஜ.க.வின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி. அமைப்பினர் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். எந்த பிரச்சினையிலும் தமிழக மக்களின் கவனத்தை ஈர்ப்பத்தில் படுதோல்வி அடைந்து வருகிற தமிழக பா.ஜ.க., இப்பிரச்சினையை கையில் எடுத்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களது வீட்டை முற்றுகையிட முயன்றது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயலாகும். உச்சநீதிமன்றத்தில் உரிய ஆணை வழங்கிய பிறகும் முதலமைச்சரிடம் நீதி கேட்டு போராடுவது எந்த வகையிலும் ஏற்கக் கூடியது அல்ல. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். 

KS Alagiri Slams Annamalai

மத்தியில் மோடி தலைமையில் நடைபெறும் ஆட்சி இன்னும் 80 ஆண்டுகள் நீடிக்க வேண்டுமென்று மக்கள் நினைப்பதாக அண்ணாமலை பேசியிருக்கிறார். அண்ணாமலையின் கற்பனை எல்லை இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. எட்டு ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் நாட்டு மக்கள் படும் துன்பத்திற்கு அளவே கிடையாது. இந்தியாவில் கொரோனா தொற்றினால் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மடிந்திருக்கிறார்கள். விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், வரலாறு காணாத வகையில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் அண்ணாமலையின் பேச்சு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகவே இருக்கிறது. தி.மு.க.வின் எட்டு மாத ஆட்சியில் மக்கள் சலிப்படைந்ததாகக் கூறுகிறார். 

ஆனால், எட்டு மாதங்களில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தி வருகிற மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு ஒவ்வொரு நாளும் மக்களின் ஆதரவு பெருகி வருகிறது. மக்கள் நலன் சார்ந்த பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. இதனால், நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வரலாறு காணாத வெற்றியை தமிழக மக்கள் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். அதேநேரத்தில், பா.ஜ.க.வை தமிழகத்தில் வேரூன்ற முடியாமல் மக்கள் புறக்கணித்து வருகிறார்கள். 

KS Alagiri Slams Annamalai

தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கிற நீட் தேர்வை ஆதரிக்கின்ற தமிழக விரோத கட்சியாக பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. என்றைக்குமே தமிழகத்தில் பா.ஜ.க. நுழைய முடியாது என்ற தலைவர் ராகுல்காந்தி அவர்களின் கூற்று உறுதிப்படுகிற வகையில் தமிழக பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. அதற்கு மோடி அரசு துணை போகிறது. எனவே, தமிழக மக்களின் நலனிற்கு விரோதமாக செயல்படுகிற அண்ணாமலை, எந்தப் பிரச்சினையை கையில் எடுத்தாலும் எந்தவித பலனும் கிடைக்காமல் அவருக்கு எதிராகவே போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் எதிர்காலமே இல்லாத ஒரு கட்சியாக பா.ஜ.க. விளங்கி வருகிறது. இதை அண்ணாமலை உணர வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios