ஜெயலலிதா மறைவுக்கும் பிறகு தமிழகத்தை எப்படியாவது கையகப்படுத்திவிட வேண்டும் என துடிக்கும் பாஜக வின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கைதான் முன்னாள்  அமைச்சர் சிதம்பரத்தின் வீட்டில் ரெய்டு நடத்தி வருவதாக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி குற்றச்சாட்டியுள்ளார்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் சென்னை மற்றும் காரைக்குடி  வீடுகள் அலுவலகங்கள் மற்றும் டெல்லி நொய்டா உட்பட நாடு முழுவதும் 14 இடங்களில் சிபிஐ அதிரடியாக சோதனை நடத்தி வருகிறது.

INX என்ற தனியார் மீடியாவுக்கு  சிதம்பரம் பதவியில் இருந்தபோது அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவரது மகன் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது.

இதற்காக இன்று சிபிஐ சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி, அரசியல் ரீதியாக மத்திய அரசின் பழி வாங்கும் நடவடிக்கை என்று தெரிவித்தார். 

தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தை கையகப்படுத்தும் பாஜக வின் முயற்சிதான் சிதம்பரம் வீட்டில் ரெய்டு என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் சிதம்பரம் இதற்கு தக்க பதிலடி கொடுப்பார் என்றும் கே.ஆர்.ராமசாமி தெரிவித்தார்.