Kovai : திமுக மேயர் வேட்பாளர்கள் இவர்களா ? கோவையை கைப்பற்றப்போவது யார் ? திமுக Vs அதிமுக
விரைவில் வரவிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் கோவையில் போட்டியிடும் மேயர் யார் ? என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதிகாரம் மற்றும் பணத்தின் துணையுடன் இறங்கும் செந்தில் பாலாஜியை, வேலுமணியும் அதே அளவுக்கு நிகராக பணத்தினை இறக்கி வேலை செய்து வருகிறார். யார் கோவையை கைப்பற்றுவார்கள் என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, யார் கோவையின் மேயராக போட்டியிடுவார்கள் என்ற கேள்வி மற்றொரு பக்கம் எழுந்துள்ளது. நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும் மேயர் என்றால், எம்.பி, எம்.எல்.ஏவுக்கு இணையான மரியாதை இருக்கும். மறைமுக தேர்தல் என்றால், கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்றாலே போதும். எம்.எல்.ஏ.,வாக இருந்தவர்கள், எம்.எல்.ஏ மற்றும் எம்.பி பதவிக்கு போட்டியிட்டவர்கள் அதற்கு விரும்ப மாட்டார்கள்.
'ஒரு வேளை தோற்று விட்டால், மானம் மரியாதை மொத்தமாக கப்பலேறி விடும் என்ற பயமும் அவர்களுக்கு இருக்கும்' என்பது அரசியல் கட்சியினர் கருத்தாக உள்ளது. இந்த தேர்தல் நிச்சயம் மறைமுக தேர்தலாகவே இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. எனவே தமிழகம் முழுவதும் மேயர் தேர்வு செய்வதில் நிச்சயம் பணம்,அதிகாரம் முக்கிய இடம் பிடிக்கும் என்றே கூறலாம். கோவையில் சொல்லவே தேவையில்லை. அதிலும் ஆளுங்கட்சியான திமுகவில் யார் வேட்பாளர் என்று பெரிய கேள்வி எழுந்து இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் மேயர் வேட்பாளர் ஆணா அல்லது பெண்ணா ? என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது.அநேகமாக அது பெண்ணாக இருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள். திமுக சார்பில் மீனா ஜெயக்குமார் போட்டியிடுவார் என்று தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் அமைச்சர் எ.வ வேலுவின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக மாநில மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளராக இருக்கிறார் மீனா ஜெயக்குமார். எந்தவொரு தேர்தலிலும் இதுவரை போட்டியிடாத ‘மீனா ஜெயக்குமார்‘, நேரடியாக ‘மேயர்’ தேர்தலுக்கு போட்டியிடுகிறார்.
அடுத்ததாக மேயர் ரேஸில் இருப்பவர் அமிர்தவள்ளி. இவர் தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவை வடக்கில் போட்டியிட்டு தோல்வியடைந்த சண்முக சுந்தரத்தின் மனைவி ஆவார். கோவை மாநகர் மேற்கு மாவட்ட செயலாளர் மாலதியும் இந்த பட்டியலில் முன்னிலையில் இருக்கிறார். அதேபோல கோவை வடக்கில் 2016 இல் போட்டியிட்ட மீனா லோகு என பட்டியல் நீள்கிறது.
ஒருபக்கம் பெண்கள் பட்டியலே இவ்வளவு என்றால், ஆண்கள் பட்டியல் பற்றி சொல்லவே வேண்டாம். அதுவும் பெரிய பட்டியல் தான். சிங்காநல்லூர் முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக், அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த பி.ஆர்.ஜி.அருண், மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் கோகுல்,மருதமலை சேனாதிபதி என பட்டியல் நீள்கிறது.