பாமகவும் ராமதாஸும், அன்புமணியும் சமூக நீதி என்ற பெயரில் எங்களைப் போன்ற தலித் சமுதாய மக்களை ஏமாற்றியும், மற்ற சமுதாய மக்களைப் பிரித்து சாதி மோதலை உருவாக்கியதை இப்போது தான்  உணருகிறோம் என அமமுகவில் இணைந்த மாதவன் கூறியுள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததை விரும்பாத முக்கிய நிர்வாகிகளான ராஜேஸ்வரி பிரியா ரஞ்சித், பொங்கலூர் மணிகண்டன் பாமகவிலிருந்து விலகி அமமுகவில் இணைந்த நிலையில் மேலும் ஒரு மாநிலத் துணைத் தலைவர் காங்கயம் கி.மாதவன், இரு மாவட்டச் செயலாளர்களுடன் பாமகவிலிருந்து விலகி  தினகரன் கட்சியில் இணைந்தனர்.

பாமகவிலிருந்து விலகியது குறித்து பேசிய மாதவன்;  பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக நீதிக் கொள்கையை நம்பி அந்தக் கட்சி நடத்திய போராட்டங்கள் அனைத்திலும் கலந்து கொண்டு சிறை சென்றவன் நான். ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் தலித் சமுதாய மக்களைப் பெருமளவில் கட்சியில் இணைத்தேன், அதனால், 2001 இல் அதிமுக கூட்டணியில் அந்தியூர் மற்றும் தாராபுரம் தொகுதியைப் பெற்று தனித் தொகுதியான தாராபுரம் தொகுதியை பாமக பெற்று வெற்றி பெற்றது. இதனால் தான் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை தாராபுரம் நகராட்சி தலைவராக்கினோம். 

ஆனால், பாமகவும் ராமதாஸும், அன்புமணியும் சமூக நீதி என்ற பெயரில் எங்களைப் போன்ற தலித் சமுதாய மக்களை ஏமாற்றியும், மற்ற சமுதாய மக்களைப் பிரித்து சாதி மோதலை உருவாக்கியும் வந்து இருப்பதை இப்போது தான் நாங்கள் அதை உணருகிறோம். 

கடந்த 30 வருஷமா பெரும் மனச்சுமையோடு பாமகவில் இருந்து வருகிறேன். வாழ்க்கையில் நான் செய்த வரலாற்றுத் தவற்றுக்குப் பிராயச்சித்தம் தேடும் வகையில் அமமுகவில் இணைய முடிவு செய்தேன் என கடிதம் மூலம் தினகரனுக்குத் தெரியப்படுத்திய பிறகு அவர் முன்னிலையில் இணைந்தேன் என்ற மாதவன் கூறியுள்ளார்.