Asianet News TamilAsianet News Tamil

திமுகவே நினைத்திருந்தாலும் தடுத்திருக்க முடியாது..!! கொளத்தூர் மணி அந்தர் பல்டி..!!

மதவாத பாசிச பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக உறுதியாக இப்போது களத்தில் நிற்கிற திராவிட முன்னேற்ற கழகத்தை மட்டும் தொடர்ந்து குறைகூறுவது, செயற்கையான உள்நோக்கத்தோடும், எதிரிகளுக்கு ஆதரவாகவும் செய்யப்படுகிற சதி

kollathur mani statement regarding dmk Lankan Tamils politics
Author
Chennai, First Published May 4, 2020, 12:30 PM IST

பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக உறுதியாக இப்போது களத்தில் நிற்கிற திராவிட முன்னேற்ற கழகத்தை மட்டும் ஈழத்தமிழர் விவகாரத்தில் தொடர்ந்து குறைகூறுவது, செயற்கையான உள்நோக்கத்தோடும், எதிரிகளுக்கு ஆதரவாகவும் செய்யப்படுகிற சதியாகவே நாங்கள் கருதுகிறோம் என திராவிடர் விடுதலைக் கழகம், தலைவர் கொளத்தூர் மணி  தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்... கடந்த சில நாட்களாக விடுதலைப் புலிகள் - திராவிட முன்னேற்றக் கழகம் என்ற எதிர் எதிர் விவாதங்கள் சமூக வலைதளங்களில் மிகுந்து காணப்படுகின்றன.ஒரு பக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் இறுதிப்போரின் போது ஈழத் தமிழர்களை வஞ்சித்து விட்டது என்பதான புலிகள் ஆதரவு வாதங்களும்,இன்னொரு பக்கம் புலிகள் தான் அநியாயமாக ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்குக் காரணமாக இருந்தார்கள் என்பதாக ஒரு பக்கமும் செயற்கையான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. 

kollathur mani statement regarding dmk Lankan Tamils politics

இந்த விவாதங்களில் சில கடுஞ் சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன. இரு தரப்பாரும் தங்கள் நிலையை அல்லது தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொள்வதற்காக வரம்பு கடந்து சில வாதங்களை வலிந்து முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள். 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரின்போது இந்திய அரசே நினைத்திருந்தாலும் போரினை நிறுத்தியிருக்க முடியாது. மேற்கத்திய வல்லரசுகள் நடத்திய போர் அது என்பது ஒரு காரணம். சிங்கள அரசும் பிரிட்டன் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரையும் பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதியாக செல்ல இருந்த ஸ்வீடனின் முன்னாள் பிரதமரையும் கூட இலங்கைக்குள் நுழைவதற்கு விசா மறுத்து, இந்த வாய்ப்பை விட்டால் வேறு வாய்ப்பு இல்லை என்று கருதி போரினை நடத்திக் கொண்டிருந்த காலம் அது. என்றாலும் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தலைவர் கலைஞரும் ஈழ மக்களுக்கு, புலிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பக்கூட முன்வரவில்லையே என்ற ஓர்ஆதங்கம் எங்களுக்கும் உண்டு. 

kollathur mani statement regarding dmk Lankan Tamils politics

அதன் காரணமாக அந்த ஆண்டு நடந்த தேர்தலில் கூட திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்திருந்தோம். அடுத்த தேர்தலிலும் பல தொகுதிகளில் எதிர் நிலையே எடுத்தோம். ஆனால் 10 ஆண்டுகள் கழிந்த பின்னாலும் அந்த ஒற்றைக் காரணத்தைச் சொல்லியே திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தாக்க வேண்டிய தேவை இப்போது இல்லை என்பதே எமது கருத்தாகும். ஒரு காலத்தில் நடந்ததையே காலாகாலத்துக்கும் பேசப்படும் என்றால் 1936இல் பெரியாரை விட்டு வெளியேறிய ஜீவானந்தம் போன்றவர்களும் பொதுவுடமைக் கட்சியினரும் மிக மோசமான விமர்சனங்களைப் பெரியார் மீதும், திராவிடர் கழகத்தின் மீதும் வைத்திருந்தும், சில ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த தேர்தலில் திராவிடர் கழகம், காங்கிரசுக்கு எதிராக இந்திய பொதுவுடமைக் கட்சிக்கு ஆதரவாகத்தான் தேர்தலில் நின்றது:   சுற்றிச் சுழன்று கடும் பணியாற்றியது. அது போலவே திராவிட முன்னேற்றக் கழகமும் பிரிந்துசென்றதற்குப் பின்னால் பெரியார் மீதான கடுமையான விமர்சனங்களை வைத்திருக்கிறார்கள். 

kollathur mani statement regarding dmk Lankan Tamils politics

அதுவும் கலைஞர் அவர்கள் மிகக் கடுமையான, உண்மைக்கு மாறான தரந்தாழ்ந்த பல விமர்சனங்களைப் பெரியார் மீது வைத்திருந்திருக்கிறார். ஆனால் அந்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவாகவும், தன்மீது கடும் விமர்சனங்களை வைத்த கலைஞர் கருணாநிதிக்கு சிலை அமைக்க வேண்டும் என்று பெரியாரே அறிவிக்கத்தக்க அளவுக்கான அரசியல் மாற்றங்கள் நடந்தன.ஏன், ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காக, இறுதிப் போரின்போது நடந்த இனப்படுகொலைக்கு நியாயம் கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிற பிரிட்டிஷ் தமிழ் மன்றம் கூட திராவிட முன்னேற்ற கழகத்தின் இன்றைய தலைவரை, அவர்கள் நடத்திய மாநாட்டுக்கு அழைத்திருந்தார்கள். வரலாறு பல நேரங்களில் பல மாற்றங்களை, விசித்திரங்களை செய்ய வைத்துக்கொண்டுதான் இருக்கிறது. அதுபோலவே இப்போது தமிழ்நாட்டில் அல்லது இந்திய துணைக்கண்டத்தில் நடந்து கொண்டிருக்கிற பாரதிய ஜனதா கட்சியின் பாசிசப் போக்குக்கு எதிராகவும், தமிழ்நாட்டிலும் ஜாதிய ஆதிக்கவாதிகள் தங்கள் தன்னலத்தைக் கருத்தில் கொண்டு ஜாதிய மோதல்களை உருவாக்கி வருவதற்கு எதிராகவும் கடும் பணி ஆற்றிட வேண்டிய இந்த வேளையில் பதினோரு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பேசிக் கொண்டிருப்பது என்பதும், 

kollathur mani statement regarding dmk Lankan Tamils politics

ஈழ விடுதலைக்கும், விடுதலைப்புலிகளுக்கும் எதிராக மிகக் கடுமையான விமர்சனங்களையும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை தூக்கில் போட வேண்டும் என்கிற அளவிற்கு தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர்களைப் பற்றி எந்த விமர்சனமும் செய்யாமல், மதவாத பாசிச பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக உறுதியாக இப்போது களத்தில் நிற்கிற திராவிட முன்னேற்ற கழகத்தை மட்டும் தொடர்ந்து குறைகூறுவது, செயற்கையான உள்நோக்கத்தோடும், எதிரிகளுக்கு ஆதரவாகவும் செய்யப்படுகிற சதியாகவே நாங்கள் கருதுகிறோம். இந்த சூழலில், மற்றவர்கள் நிலைப்பாடு எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்! கழகத் தோழர்கள் இப்படிப்பட்ட தேவையற்ற தரம் தாழ்ந்த விவாதங்களில் பங்கேற்கத் தேவையில்லை என்பதை அழுத்தமாக கூறிக்கொள்ள விரும்புகிறோம். என திராவிடர் விடுதலைக் கழகம், தலைவர் கொளத்தூர்.தா.செ.மணி  தெரிவித்துள்ளார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios