கொடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் ஆ.ராசா கூறிய சில விஷயங்களும் எழுப்பிய சில கேள்விகளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தூக்கத்தை கெடுக்கும் வகையில் உள்ளன.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயர் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் அடிபட்டுள்ளது. அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு ஊர் பிரச்சனையில் நடைபெற்ற கொலையில் எடப்பாடி பழனிசாமியும் கொலை குற்றவாளியாக சேர்க்கப்பட்டு பின்னர் அந்த வழக்கில் இருந்து விடுதலையானார். அதன் பிறகு அ.தி.மு.கவில் இணைந்து தற்போது தமிழக முதலமைச்சராகும் அளவிற்கு உயர்ந்துள்ளார். 

இந்த நிலையில் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது மேலும் ஒரு கொலைப்பழி சுமத்தப்பட்டுள்ளது. கொலைப்பழி சுமத்தப்பட்டுள்ளதோடு இல்லாமல் ஏன் இப்படி கூறுகிறோம் என்று தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா செய்தியாளர்கள் சந்திப்பில் எழுப்பிய கேள்விகள் தான் ஹைலைட். செய்தியாளர் சந்திப்பில் ஆ.ராசா கூறியதாவது:  2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்கிறார். அடுத்த இரண்டு மாதங்களில் கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை நடைபெறுகிறது. அப்போது காவலாளி ஓம் பகதூர் மர்மமான முறையில் உயிரிழந்துவிடுகிறார். 

அடுத்த சில நாட்களில் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வரும் ஜெயலலிதா – சசிகலாவின் கார் ஓட்டுனர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. மறுநாளே கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான சயன் கார் கேரளாவில் விபத்தில் சிக்கியுள்ளதாக கூறுகிறார்கள். இந்த விபத்தில் சயன் தப்பினாலும் அவரது மனைவி மற்றும் குழந்தை உயிரிழந்துவிடுகிறது. அடுத்த 2 மாதங்களில் கொடநாடு சி.சி.டி.வி ஆப்பரேட்டர் தினேஷ் தூக்கு போட்டு இறந்துவிட்டதாக கூறுகிறார்கள். இந்த நான்கு சம்பவங்களுமே முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்ற பிறகு தான் நிகழ்கின்றன. 

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் முதலமைச்சரின் கேம்ப் ஆபிசாகவும் செயல்பட்டு வந்ததால் அங்கு 24 மணி நேரமும் மின் விநியோகம் வழங்க சிறப்பு அனுமதியை கொடுத்ததே நான் மத்திய அமைச்சராக இருந்த போது தான். ஆனால் கொள்ளை நடைபெற்ற தினத்தில் மின்சாரம் கொடநாடு எஸ்டேட்டிற்கு கட் செய்யப்பட்டுள்ளது. அது எப்படி? யார் கட் செய்தார்கள்? யார் சொல்லி கட் செய்தார்கள்? 

முன்னாள் முதலமைச்சரின் வீடு என்ற வகையில் கொடநாடு எஸ்டேட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு உண்டு. ஆனால் கொள்ளை நடைபெற்ற போது அங்கு ஒரு போலீஸ் கூட இல்லையே ஏன்? கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை நடைபெற்ற அன்று சி.சி.டி.வி கேமராக்கள் செயல்படவில்லை என்கிறார்கள்? அது எப்படி அன்று மட்டும் சி.சி.டி.வி செயல்படவில்லை? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போன்ற அதிகாரம் மிக்க நபரின் தலையீடு இல்லாமல் கொடநாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்காது, காவலர்கள் இல்லாமல் இருந்திருக்கமாட்டார்கள். 

இதுநாள் வரை இந்த வழக்கில் சயன் குற்றவாளியாக இருந்தார். ஆனால் எப்போது அவர் இந்த சம்பவங்களை செய்தது தாங்கள் தான் என்று கூறினாரோ, அப்போதே அவர் அப்ரூவர் ஆகிவிட்டார்.  கிரிமினல் சட்டப்படி சயனை அழைத்துச் சென்று மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் பெற வேண்டும். அங்கும் அவர் எடப்பாடி பழனிசாமி சொல்லி தான் இவற்றை செய்ததாக கூறினால் உடனடியாக எடப்பாடி பழனிசாமியை கொடநாட கொலை, கொள்ளை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும். இவ்வாறு ஆ.ராசா கூறினார்.  ஆ.ராசா லாஜிக் தவறாமல் மற்றும் சட்டப் பிரிவுகளை சுட்டிக்காட்டி பேசிய விஷயங்கள் அனைத்துமே செம ரீச். இதனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தூக்கம் கெடுவது உறுதி என்கிறார்கள் தி.மு.கவினர்.