ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில், காவலர் ஓம்பகதூர் கொலை செய்யப்பட்ட வழக்கில், சசிகலா குடும்பத்தை நோக்கி புலனாய்வு விசாரணை திரும்பி உள்ளது.

கொடநாடு எஸ்டேட்டில் எந்தெந்த அறை எங்கெங்கு இருக்கிறது என்பதை அறிந்தவர்கள் மட்டுமே, அங்கு நுழைந்திருக்க முடியும் என்று விசாரணை செய்யும் போலீசார் கருதுகின்றனர்.

பொலீரோ காரில் எஸ்டேட்டுக்குள் நுழைந்தவர்களை தடுத்து நிறுத்தி வாக்கு வாதத்தில் ஈடுபட்ட, காவலாளி ஓம் பகதூர், அங்கு வந்தவர்களை அடையாளம் காட்டி விடுவார் என்ற அச்சத்தின் காரணமாகவே, அவர் அடித்து கொள்ளப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

அதனால், கையில் வெட்டுப்பட்டு உயிர் பிழைத்த மற்றொரு காவலாளியாக கிருஷ்ண பகதூரிடம், போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்துடன், கொடநாடு எஸ்டேட், போயஸ் கார்டன் ஆகிய இடங்களில் புகை பிடிக்கும் பழக்கம் உள்ள ஒரே நபர் நடராஜனின் உறவினர் ராவணன் என்று, எஸ்டேட் மேலாளர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு, கொடநாடு எஸ்டேட் கொலைக்கும், சசிகலா குடும்பத்திற்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கும் போலீசார், தங்களது விசாரணையை சசிகலா குடும்பத்தை நோக்கி திருப்பி உள்ளனர்.

அத்துடன் தமிழக போலீசாரை விட, மத்திய உளவு போலீசார், இந்த வழக்கில் அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுவதால், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.