டிராபிக் பிரச்சனை, முறைகேடான ப்ளக்ஸ் போர்டுகள் இருக்கும் இடங்களில் பொங்கி எழுந்து கொண்டிருந்த டிராபிக் ராமசாமி, தற்போது முதலமைச்சர் ஜெயலலிதா விஷயத்திலும், தொடர்ந்து கொந்தளிக்கத் தொடங்கியுள்ளார்.

முதலமைச்ச்ர ஜெயலலிதாவைக் காண்பதற்காக அப்போலோ மருத்துவமனைக்கு சென்ற டிராபிக் ராமசாமி தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.

எதற்கெடுத்தாலும் டென்ஷனாகும் டிராபிக் ராமசாமி, போலீஸ் திருப்பி அனுப்பியதால் சும்மா இருப்பாரா என்ன? நேராக வீட்டுக்கு வந்த டிராபிக் ராமசாமி, டிவியில் பொன்னையன் பேட்டி ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்து, மேலும் கடுப்பாகி விட்டார்.

உடனே ஆன் செய்தார் கேமராவை... தன்னை அனுமதிக்க மறுத்த காவல் துறையினரையும், அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தையும் கழுவு கழுவு என கழுவி ஊற்றினார்.
அநாகரீகமான வார்த்தைகள் பல வந்து விழுந்தன டிராபிக் வாயிலிருந்து. குறிப்பாக, காவல் துறையினர் மற்றும் உயர் அதிகாரிகளை ஒருமையில் ஏசினார். அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தை முதலமைச்சருடன் இருப்பவர்களையும் ஒருமையில் பேசி சாவல் விடுத்தார்.
இதைப் பார்த்த அஇஅதிமுக தொண்டர்களும் மற்றும் காவல் துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், கிஷோர் கே சாமி எனும் பிரபல பேஸ்புக் செயற்பாட்டாளர், சென்னை மாநகர காவல் துறை ஆணையரிடம், டிராபிக் ராமசாமி மீது புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் அளிக்கப்பட்ட செய்தி, நாளிதழ் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவந்தவுடன் மீண்டும் கொந்தளித்துள்ளார் டிராபிக் ராமசாமி. நேற்று மீண்டும் ஆன் செய்தார் கேமராவை. நாளிதழ் செய்திகளை மேற்கோள் காட்டி செல்லம்மாள் கல்லூரியில் பயின்ற 3 அப்பாவி இளம் பெண்கள் இறப்பை தடுக்க முடியாதவர்கள், என் மீது வழக்கு தொடுப்பதா என எகிறி இருக்கிறார்.
தன் மீது புகார் கொடுத்த, கிஷோர் கே. சாமிக்கு அவர் சவால் விடுத்துள்ளார். முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள். நான் எந்த நிலைக்கும் செல்ல தயாராக இருக்கிறேன் என சவால் விடுத்துள்ளார்.

நேற்றைய டிராபிக் ராமசாமியின் வீடியோ பட ரிலீசின் ஹைலைட்டே, டிராபிக் போலீசார் மற்றும் காவல் துறையினர் "மாமூல் வாங்குவதில்லை என தன்னிடம் நிரூபிக்க தயாரா?" என சவால் விடுத்துள்ளார்.
அதிமுக விசுவாசிகள் மற்றும் டிராபிக் ராமசாமிக்கு இடையே மோதல் முற்றியுள்ளதால், டிராபிக் ராமசாமி எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
