Kiran bedi surprise visit to Narayanasamy house
புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி முதலமைச்சர் நாராயணசாமியின் வீட்டிற்கு நேரடியாக சைக்கிளில் சென்று அவருக்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
கிரண்பேடி பதவியேற்று தற்போது இரண்டாண்டு நிறைவடைகின்றது. இதற்கான பல்வேறு நிகழ்ச்சிகள் ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வருகின்றது. கடந்த 28 ஆம் தேதி நடைபெற்ற விருந்து நிகழ்ச்சிக்கு கிரண்பேடி அழைப்பு விடுத்தும் அதை முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தார்கள். இந்நிலையில் வழக்கமாக ஆளுநர் மாளிகையில் இருந்து சைக்கிளில் புறப்பட்ட ஆளுநர் கிரண்பேடி முதலமைச்சர் நாராயணசாமி வீட்டிற்கு சென்றார்.
வீட்டுக்குள் இருந்த நாராயணசாமிக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வெளியே வந்த நாராயணசாமியின் கரங்களைப் பிடித்து விறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்த கிரண் பேடி, அவருக்கு சால்வை அணிவித்தார்.
இதைத் தொடர்ந்து கிரன்பேடிக்கு நன்றி சொன்ன நாராயணசாமி பதிலுக்கு அவரும் சால்வை அணிவித்தார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட கிரண்பேடி நேராக சபாநாயகர் வைத்திலிங்கம் வீட்டிற்கு சென்றார் அங்கு அவருக்கு சால்வை அணிவித்தார்.
சில நாட்களுக்கு முன்பு, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆளுநராக இருக்க மாட்டேன் என்று கிரண்பேடி கூறியிருந்தார். கிரண்பேடி சொன்னபடி செய்ய வேண்டும் என நேற்றுதான் முதலமைச்சர் நாராயணசாமி கடுமையாக கூறியிருந்தார்.
இந்நிலையில் கிரண்பேடியே முதலமைச்சர் வீட்டிற்கும், சபாநாயகர் வீட்டிற்கும் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து சொன்ன நிகழ்வு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதுசரி கிரண்பேடி அவர்களே நீங்கள் நல்லவரா ? கெட்டவரா ? இப்படித்தான் முதலமைச்சர் நாராயணசாமியின் மைண்ட் வாய்ஸ் கேட்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
