புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. 

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கும், கிரண்பேடிக்கும் இடையே பனிப்போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் அரசு சார்ந்த விஷயங்களில் கிரண்பேடி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் இதனால் அரசால் சரிவர செயல்படமுடியவில்லை எனவும் நாராயணசாமி தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வந்தார். 

இந்நிலையில் இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் அரசின் அன்றாட நடவடிக்கைகளை பரிசீலிக்கும் வகையில் துணைநிலை ஆளுநர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்திருந்த சிறப்பு அதிகாரங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் லட்சுமி நாராயணன் குறிப்பிட்டிருந்தார். 

இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் ஆஜராகி வாதிட்டார். அதில் அரிதிலும் அரிதான அரசின் நடவடிக்கைகளில் மட்டுமே துணைநிலை ஆளுநர் தலையிட முடியும் எனவும், மாறாக அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுவது கேலிக்கூத்தானது என வாதிட்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அனைத்து அதிகாரங்களையும் மீறி, துணை நிலை ஆளுநரால் செயல்பட முடியாது. அதற்கு அவருக்கு அதிகாரமும் இல்லை என ப.சிதம்பரம் கூறினார். இதனையடுத்து துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அதிகாரம் ரத்து செய்யப்படுவதாகவும் முதல்வரின் அதிகாரத்தில் அவர் தலையிட முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

 

இந்நிலையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.