நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளருமான குஷ்பு, அண்மைக்காலமாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக குஷ்பு பேசிவருவதால், அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேரப்போகிறார் என்ற பேச்சு உள்ளது. 

புதிய கல்விக்கொள்கைக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அக்கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்துகொண்டே, தான் சார்ந்த கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக, புதிய கல்விக்கொள்கைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். 

குஷ்புவின் கருத்து காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குஷ்புவின் மீது அதிருப்தியில் உள்ளனர். குஷ்பு பாஜகவில் இணையவுள்ளதாக பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். 

காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, மாற்றுக்கருத்தை வரவேற்கும் கட்சி காங்கிரஸ். ஆனால் அதை பொதுவெளியில் சொல்வது என்பது முதிர்ச்சியின்மை என்று தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி உள்ளிட்ட மற்ற சிலரும் குஷ்புவை விமர்சித்திருந்தனர். 

மேலும், இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்பதாகவும் புதிய கல்விக்கொள்கையில் சில குறைகள் இருப்பினும் இந்த மாற்றத்தை வரவேற்பதாகவும் தெரிவித்திருந்தார். குஷ்புவின் இந்த கருத்து முரணையடுத்து, அவர் பாஜகவில் சேரப்போவதாக தகவல் பரவிவருகிறது. ஆனால் தான் பாஜகவில் சேரப்போவதாக பரவிய தகவலுக்கு மறுப்பு தெரிவித்தார் குஷ்பு. 

ஆனால், மத்திய உள்துறை அமைச்சரும் முன்னாள் பாஜக தேசிய தலைவருமான அமித் ஷாவிற்கு கொரோனா உறுதியானதாக தகவல் வெளிவந்ததும், அக்கட்சியின் தலைவர்களையெல்லாம் முந்திக்கொண்டு, அமித் ஷா குணமடைய வேண்டும் என்று குஷ்பு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருப்பதுடன், அவர் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் பதிவிட்டுள்ளார். 

 

குஷ்புவின் இந்த டுவீட்டை கண்ட பலரும், பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு என்றும் குஷ்பு பாஜகவில் இணையப்போவதை உறுதி செய்யும் சமிக்ஞை என்றும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.