கடந்த 2 மாதங்களுக்கு கேரள மாநிலம்  சந்தித்த பெரும் துயரம்  உலக மக்களால் மறக்க முடியாத ஒன்று. கடவுளின் தேசமான  கேரளா மழை வெள்ளத்தால் தத்தளித்தது.

சாமானிய மக்கள் தொடங்கி பிரபலங்கள் வரை அனைவரின் வீடுகளும் தண்ணீரிலில் மிதந்தன.  வெள்ளக்காடாக காட்சியளித்த கேரளாவை இந்த மாபெரும்  துயரத்தில் இருந்து மீட்க  அண்டை மாநிலங்கள் கைக்கோர்த்தன.

குறிப்பாக, தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கேரளாவை  மீண்டும் மீட்டெடுக்க பல்வேறு உதவிகளை செய்தனர். தமிழகர்களை செயலை கண்டு  வியந்த, நெகிழ்ந்த மலையாள சேட்டன்கள்  தங்களது நன்றியை வீடியோ, கடிதம் மூலம் தெரிவித்தனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயனும்  தமிழக மக்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்திருந்தார். இந்நிலையில்,  கஜா புயல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு 10 கோடி நிவாரண நிதி வழங்க நேற்று நடந்த கேரள அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 

மேலும் 6 மருத்துவ குழுவினரும், கேரள மின்வாரியத்தை சேர்ந்த 72 ஊழியர்களும் தமிழகம் விரைந்து நிவாரண பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தன்னார்வலர்களும் நிவாரண பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்பாக கஜா புயலால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தைத் தொலைத்து நிற்கும் டெல்டா மக்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.