கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கேரள சட்டமன்ற  தேர்தலில் இடது சாரிகள் அபார வெற்றி பெற்று பினராயி விஜயன் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஆளுங்கட்சி படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில்தான் கேரளா மாநிலம் பாலா சட்டசபைத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கேரள காங்கிரஸ் (எம்) பிரிவு தலைவர் கே.எம்.மாணி. கடந்த ஏப்ரல் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் அவரது தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த இடைத்தேர்தலில் கே.எம்.மாணியுடன் நெருக்கமாக பணியாற்றிய ஜோஸ் டாம் புலிக்குன்னில் காங்கிரஸ் கூட்டணி சார்பிலும், பா.ஜ.க. சார்பில் கட்சியின் கோட்டயம் மாவட்ட தலைவர் என்.ஹரியும், இடதுசாரிகள் ஆதரவோடு தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் மாணி சி.கப்பென் உள்பட 13 பேர் போட்டியிட்டனர்.

இந்நிலையில், இடைத்தேர்தல் நடைபெற்ற பாலா தொகுதியில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிட்ட மாணி சி.கப்பென், காங்கிரஸ் வேட்பாளர் புலிக்குன்னலை விட 2,943 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கேரளாவில் மேலும் 5 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.