கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணி பல்வேறு இடங்களில் முன்னிலையில் உள்ளது. 2வது இடத்தில் காங்கிரசும், 3வது இடத்தில் பாஜகவும் உள்ளது. 

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் 3 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. கடந்த 8ம் தேதி முதல் கட்ட தேர்தலும், 10ம் தேதி 2ம் கட்ட தேர்தலும், 14ம் தேதி இறுதிக்கட்ட தேர்தலும் நடைபெற்றது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்ட இந்த தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த தேர்தலில் 77.76 சதவீதம் பதிவான நிலையில் இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சற்று குறைந்துள்ளது. 3 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிமுதல் எண்ணப்பட்டு வருகிறது. 

இதில், ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ளன. பாஜக ஒரு சில இடங்களை தவிர மற்ற இடங்களில் பின்தங்கியுள்ளது. மாநகராட்சிகளில் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) 3 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி (யுடிஎப்) 3 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. 86 நகராட்சிகளில் இடது ஜனநாயக முன்னணி 41 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 39 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

14 மாவட்ட பஞ்சாயத்துகளில் 9ல் இடதுசாரிகளும், 5ல் காங்கிரஸ் கூட்டணியும் முன்னிலை பெற்றுள்ளன. 152 ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்துகளில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி 103 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. 941 கிராம பஞ்சாயத்துகளை பொறுத்தவரையில் இடது ஜனநாயக முன்னணி 484 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 383 இடங்களிலும், பாஜக 22 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.