இந்திய வரலாற்றில் முதல்முறையாக திருநங்கைகளுக்கென  கூட்டுறவு வங்கியை உருவாக்கி, பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு மீண்டும் ஒரு முன்னுதாரணத்தை படைத்துள்ளது.

கேரள மாநிலத்தில் திருநங்கைகளை  முன்னேற்றப்பாதைக்கு கொண்டுவரும் நடவடிக்கையாக இந்த கூட்டுறவு வங்கியைத் தொடங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘டிரான்ஸ்ஜென்டர் கோ-ஆப்ப ரேட்டிவ் சொசைட்டி’ என்ற பெயரில் இந்த கூட்டுறவு வங்கி தொடங்கப்படவுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய  திருநங்கைகளுக்கான கூட்டுறவு  வங்கி  ஊக்குவிப்புக்குழுத் தலைவர் சியாமா பிரபா, இந்த கூட்டுறவு வங்கி மூலமாக மூலதனத்திற்கும், சொந்தமாக தொழில் செய்யவும் வழி பிறக்கும். ஹோட்டல்கள், கேண்டீன்கள், அழகு நிலையங்கள், டிடிபி மையங்கள் போன்ற ஏராளமான சுய தொழில் நிறுவனங்கள் தொடங்க கூட்டுறவு வங்கி மூலமாக திருநங்கைகளுக்கு  வழி ஏற்பட உள்ளது.

இதுதொடர்பான கூட்டம், திருவனந்தபுரத்தில் உள்ள கூட்டுறவு வங்கி கலையரங்கில் நடைபெற்றது. அதில் திருநங்கைகள்  என்கிற பேரில் சமூகத்தால் தனிமைப் படுத்துவோருக்கு தங்குமிடத்தையும் கூட்டுறவு சங்கம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.

 மது, போதை மருந்து பயன்பாட்டுக்கு எதிரான பிரச்சாரத்தையும் இச்சங்கம் மேற்கொள்ளும். மாற்றுப்பாலினத்தவர் கூட்டுறவு சங்கத்தின் நடவடிக்கை மாநிலம் தழுவியதாக இருக்கும் என . சியாமா எஸ் பிரபா தெரிவித்தார்.