* தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கிய இரண்டு சீட்களில் ஒன்றையாவது சிவகாமியின் சமூக சமத்துவ படைக்கு ஒதுக்கியிருக்கலாம். ஆர்.எஸ்.பாரதி எங்களை இது தொடர்பாக வெயிட் பண்ணச் சொன்னார். ஆனால் அதன் பிறகு பதிலில்லை!: சமூக சமத்துவ படை பொதுச்செயலாளர் மோகன்ராஜ். (டியர் மிஸ்டர் திருமா, இதன் மூலமா தி.மு.க. உங்களுக்கு தரும் சேதி என்னான்னா, கூட்டணிக்குள்ளே அவங்களோட பேச்சை கேட்டுட்டு நீங்க கம்முன்னு இல்லேன்னா, உங்க உறவை முறிச்சுட்டு சமூக சமத்துவ படைக்கு அந்த ரெண்டையும் அள்ளிக் கொடுத்துடுவோம்! அப்படிங்கிறதுதான்.)

* தேசிய அளவில் காங்கிரஸின் குடும்ப அரசியலும், மாநில அளவில் தி.மு.க.வின் குடும்ப அரசியலும் தோற்கடிக்கப்பட வேண்டும். ரெண்டுமே நாட்டுக்கும், ஒவ்வொருவரின் வீட்டுக்கும் கேடு!: ஹெச்.ராஜா. (அண்ணே இதைச் சொல்றது நீங்களா இல்ல உங்க அட்மினான்னு தெளிவா ‘பை லைன்’ போடுங்க. ஏன்னா, வெயில் கொளுத்துற தேர்தல் நேரத்துல உங்க ரெண்டு பேருல யாரு பேசுறதுன்னு புரியாம மக்கள் மண்ட காய்ஞ்சுட போறாங்க!)

* இந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40  தொகுதிகளிலும் வெற்றி பெறும். இம்முறை மதச் சார்பின்மையும், ஜனநாயகத்தை பாதுகாக்கும் அரசும் அமையும்: வைகோ. (எல்லாம் சரிதாம்ணே. 2014 தேர்தல்ல நீங்க பி.ஜே.பி. கூட கூட்டணி வெச்சப்ப அவிய்ங்க பகுத்தறிவு பொங்கி வழிய வழிய நாத்திக அரசியலா பண்ணிட்டு இருந்தாய்ங்க?  பிரசாத பொங்கலும், விபூதியும் மணக்க கமக்க இந்து அரசியல்தானே பண்ணிட்டு இருந்தாய்ங்க! அப்போ இனிச்சுது, இப்போ கசக்குதா?)

* கடந்த ஐந்து ஆண்டுகளில் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். அதை மீட்டெடுக்கவே பெரிதும் நாம் போராட வேண்டியுள்ளது: பிரகாஷ் காரத். (தல, அப்படியே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ., எம்.பி.ன்னு ஒரு ஆள் கூட உங்க கட்சியில் கிடையாது, அதையும் எப்பாடு பட்டாவது இங்கே தி.மு.க. முதுகிலும், தேசம் முழுக்க வேறு நபர்களின் முதுகிலும் ஏறி ஒக்கார்ந்து மீட்கணும் அப்படிங்கிறதையும் வெளிப்படையா சொல்றது!... உண்மை நல்லது தோழர்!)

* நான் எதையும் எதிர்பார்த்து மீண்டும் கட்சிக்குள் வரவில்லை.  அரசு காண்ட்ராக்டோ, பணமோ, எம்.பி. சீட்டோ எதையுமே  எதிர்பார்க்கவில்லை. எந்த டிமாண்டும் வைக்கவுமில்லை: கே.சி.பழனிசாமி. (இவ்வளவு டீட்டெயிலா சில பாயிண்டுகளை சொல்லி, அதுக்காக வர்ல, அதுக்காக வர்ல!ன்னு நீங்க பேசுறதை பார்த்தால், கட்சிக்குள்ளே வந்து இணைஞ்சு பதவி வாங்கிய ’யாரோ ஒரு வி.வி.ஐ.பி.’ இப்படியெல்லாம் டிமாண்டு வெச்சுதான் வந்துருக்காருன்னு சொல்லாம சொல்றீங்களா தல?)