திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலையில் நேற்று இரவு திடீரென பின்னடைவு ஏற்பட்ட நிலையில் அதிர்ந்த டாக்டர்கள் உடனடியாக அறிக்கை வெளியிட்டு விட்டு சிகிச்சை அளித்தனர். அப்போது கருணாநிதிக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளை அவரது உடல் உடனடியாக ஏற்றுக் கொண்டதுடன், சற்று நேரத்தில் அவருக்கு ஏற்பட்ட பின்னடைவு சரியானதால் டாக்டர்கள் அதிசயம் அடைந்ததாக தகவல்கள் வெளிகியுள்ளன.

வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணா நிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்ததை தொடர்ந்து அவரது ரத்த அழுத்தம் சீராகி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் நேற்று அவரது உடல் நிலை திடீரென மோசமானதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஆஸ்பத்திரி முன்பு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். சென்னை நகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டது. இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், நேற்றிரவு 9.50 மணிக்கு காவேரி ஆஸ்பத்திரியின் செயல் இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் மருத்துவ அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும், சிறப்பான மருத்துவ சிகிச்சை மூலம் அவரது உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பும் வகையில் முக்கிய அறிகுறிகள் தென்படுகின்றன. அவருடைய உடல்நிலை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ நிபுணர்கள் குழு மூலம் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெரிவித்திருந்தார்.

நேற்று அவரது பல்ஸ் ரேட்  மற்றும்  ரத்த அழுத்தம் குறைந்ததும் காவேரி டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் சிகிச்சை அளித்தனர். அதைத் தொடர்ந்து தான் அறிக்கை வெளியிடப்பட்டது.

கருணாநிதிக்கு ஊசி மூலம் மருந்து ஏற்றத் தொடங்கிய சிறிது நேரத்தில் ஆச்சரியத் தக்க வகையில் அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால் டாக்டர்கள் ஆச்சர்யம் அடைந்ததாக கூறப்படுகிறது. நேரம் ஆக, ஆக கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்ததால்  காவேரி டாக்கடர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த செய்தியை அறிந்ததும் திமுக தொண்டர்க்ள உற்சாகம் அடைந்ததுடன் , மருத்துவமனை முன்பே கருணாநிதிக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.