கவுசல்யாவின் முன்னாள் கணவர், உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தமிழக அரசு வழக்கறிஞர் எமிலியாஸ் தெரிவித்துள்ளார்.

சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதால் கடந்த 2016 மார்ச் 13-ம் தேதி உடுமலையில் சாலையில் பட்டப்பகலில் மனைவி கவுசல்யாவுடன் சென்ற சங்கர், அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திருப்பூர் நீதிமன்றம், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, ஜெகதீசன், பழனி எம்.மணிகண்டன், பி.செல்வக்குமார், தமிழ் என்கிற கலைதமிழ்வாணன், மதன் என்கிற எம்.மைக்கேல் ஆகிய 6 பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. ஸ்டீபன் ராஜுக்கு ஆயுள் தண்டனையும், மணிகன்டனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது. மேலும், கவுல்சயாவின் தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, உறவினர் பிரசன்னகுமார் ஆகிய 3 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து, தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகளில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்யப்பட்டார். ஜெகதீசன், பழனி எம்.மணிகண்டன், பி.செல்வக்குமார், தமிழ் என்கிற கலைதமிழ்வாணன், மதன் என்கிற மைக்கேல் ஆகிய 5 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகவும் குறைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இது தொடர்பாக, தமிழக அரசு வழக்கறிஞர் எமிலியாஸ், "இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வோம். தமிழக அரசு இது சம்பந்தமாக எங்களிடம் சட்ட ஆலோசனை கேட்டிருக்கிறது. சட்ட ஆலோசனைக்குப் பின் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்தத் தீர்ப்பின் நகல் இன்னும் கிடைக்கவில்லை என்பதால், என்ன காரணங்கள் சொல்லப்பட்டிருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால், மிகக்கொடூரமாக பட்டப்பகலில் நடுரோட்டில் கூலிப்படையினரை ஏவி நிகழ்த்தப்பட்ட கொலை இது. இது மிகவும் அரிதிலும் அரிதான வழக்கு.

சட்ட நுணுக்கங்களை வழக்கு விசாரணையின்போது எடுத்துரைத்தோம். சென்னை உயர் நீதிமன்றம் அதனை எப்படி எடுத்திருக்கிறது என்பது தீர்ப்பைப் படித்துப் பார்த்த பின்னர்தான் தெரியும். ஆணவக் கொலைகளுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கும்போதுதான் அதனைத் தடுக்க முடியும். அந்த விஷயத்தில் தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மிகச்சரியாகக் கையாண்டதால்தான் கீழமை நீதிமன்றத்தில் இந்த வழக்கில் 6 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

தற்போது இருக்கும் சட்டங்களே ஆணவக் கொலைகளைத் தடுக்கப் போதுமானது. சாதி வெறி இம்மாதிரியான கொலைகளுக்கும் முக்கியக் காரணம்" என அவர் கூறினார். மேல்முறையீடு செய்ய இருப்பதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்து இருப்பது சின்னச்சாமி குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.