சமீப காலமாக தொடர் பரபரப்பையும் காமெடி கலாட்டாக்களையும் அரங்கேற்றி வருபவர் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த மார்கண்டேய கட்ஜு.

முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த வருத்தமான சூழலில், அவரை நான் சிறுவயதில் ஒரு தலையாக காதலித்தேன் என அரைவேக்காட்டுத்தனமாக கருத்தக்களை பதிவிட்டு பின்னர் உடனடியாக அதை பின்வாங்கியும் கொண்டார் மார்கண்டேய கட்ஜு.

தமிழகத்தின் பிரச்சனைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் கட்ஜு, பொதுவாக கருணாநிதியையும், திமுகவையும் சாடுவார்.
ஆனால் ஜெயலலிதா மற்றும் அதிமுகவின் மீது மென்மையான மற்றும் அனுசரணையான கருத்துக்களையே தெரிவிப்பார்.
இந்தநிலையில், திடீரென அதிமுக அரசின் தற்போதைய உள்துறை மற்றும் நிதித்துறை அமைச்சரான ஓ.பன்னீர்செல்வத்தின் மீது பாய்ந்துள்ளார்.
மார்கண்டேய கட்ஜு இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் ஓ.பி.எஸ்.ஸிற்கு எழுதியுள்ள கடிதத்தில் பல அதிரடியான கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில்,
ஓ.பன்னீர்செல்வம், தமிழக உள்துறை செயலாளர், தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் , அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை மேற்கோள்காட்டி எழுதியுள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதா விரைந்து குணமடைய வாழ்த்துக்கிறேன்.
ஆனால், நீங்கள் பலரை கைது செய்து வருகிறீர்கள். குறிப்பாக, ஜெயலலிதா உடல்நிலை குறித்து தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்ற காரணத்தை கூறி பலரையும் கைது செய்து வருகிறீர்கள்.
எந்த சட்டத்தின் அடிப்படையில் நீங்கள் இதை செய்கிறீர்கள்?
இது ஜனநாயகமா? அல்லது சர்வாதிகாரமா?
தமிழகத்தில் பேச்சு சுதந்திரத்திற்கு உரிமை இல்லையா?
நீங்கள் கொடூரமான சர்வாதிகாரிபோல் நடந்து கொள்கிறீர்கள். இன்னும் சொல்லப்போனால் மற்றும் ஒரு சர்வாதிகாரியான மம்தா பானர்ஜி போல் செயல்படுகிறீர்கள்.
ஜாதவ்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் மகாபத்ரா சமூக வலைதளத்தில் ஒரு கேலிச்சித்திரம் வரைந்ததற்காக கைது செய்யப்பட்டார்.
அது போன்ற சர்வாதிகாரமாக இது?
மகாராஷ்டிராவில் பிரபல கார்டூனிஸ்ட் அசீம் திரிவேதி கைது செய்யப்பட்டது போலவா? அல்லது நீங்கள் கைது செய்த நாட்டுப்புற பாடல் கலைஞர் கோவன் போன்ற விஷயமா இது? என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இப்படி கேள்வி எழுப்பியுள்ள கட்ஜு இனி குறிப்பிடும் விஷயம் தான் அதிரடி ரகம்.
இதுபோன்ற சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைகளை நீங்கள் எடுத்து வருவது உங்களுக்கு தெரியுமா?
மேலும், குடியரசுதலைவரிடம் நான் முறையிடப்போகிறேன். அதாவது, தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும்.
356- சட்ட விதிப்படி ஆட்சியை கலைக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு சீர் குலைந்திருப்பதால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்போவதாக கூறியுள்ளார்.
இதன்பிறகும் சும்மாவிடவில்லை கட்ஜு.
குடியரசுத்தலைவர் ஆட்சிக்குப்பிறகு இந்த கைதுகளுக்கு சம்மந்தப்பட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி தரப்போவதாகவும் கொக்கரித்துள்ளார்.
.jpg)
கடந்த வாரம் அதிமுக தலைமையை வாயாற புகழ்ந்த கட்ஜுவா இந்த வாரம் இப்படி பேசுகிறார் என டெல்லியில் உள்ள வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.
சமீப காலமாக பேஸ்புக்கில் கருத்துக்களை பதிவிடுகிறேன் என்ற பெயரில் இப்படி கண்ணாபின்னா என உளறிக்கொட்டுவது மார்க்கண்டேய கட்ஜுவிற்கு வழக்கமாகிவிட்டது.
