வெறும் வாயையே நல்லா மென்னுவார்கள்; இதுல அவல் கிடைத்தால் விடுவார்களா? கரூர் அதிமுக வட்டாரத்தில் இப்படித்தான் மென்னுக்கொண்டிருக்கிறார்கள். அமமுகவிலிருந்து விலகி அண்மையில் திமுகவில் சேர்ந்த செந்தில் பாலாஜி கரூரில் நடத்திய இணைப்பு விழாவில் தினகரனைப் பற்றி மு.க.ஸ்டாலினும் செந்தில் பாலாஜியும் ஒரு வார்த்தைக்கூட பேசாதது ஏன் என்றுதான் கரூரில் அதிமுகவினர் அவலை மெல்லுவதைப் போல மென்றுக்கொண்டிருக்கிறார்கள்.

வழக்கமாக ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு மாறி செல்வோர், முந்தைய தலைமையைப் பற்றி கொஞ்சமாவது விமர்சித்துப் பேசுவார்கள். ஆனால், செந்தில் பாலாஜி தினகரனைப் பற்றி இணைப்பு விழாவில் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. தினகரன் என்ற வார்த்தையை உச்சரிப்பதையே முற்றிலும் தவிர்த்துவிட்டார் செந்தில் பாலாஜி. தினகரன் முகாமிலிருந்து மாறி வந்தவர்களை வரவேற்று பேசும்போது குறைந்தபட்சம் ஸ்டாலினாவது விமர்சனம் செய்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஸ்டாலினும் தினகரனைப் பற்றியோ அமமுகவைப் பற்றியோ ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுகவை டெபாசிட் இழக்க வைத்து பெரும் வெற்றி பெற்றவர் தினகரன் என்ற வகையில்கூட விமர்சனத்தை வைக்க திமுக தலைவர் ஸ்டாலின் வைக்கவில்லை. அதிமுக பலவீனமாகிவிட்டது என்று ஸ்டாலின் அடிக்கடி விமர்சனம் செய்துவருகிறார். ஆனால், தொண்டர்கள் பலம் தங்களுக்கே உள்ளதாக பெரிய அளவில் பிரச்சாரம் செய்துவரும் தினகரனை பற்றி ஏன் பேசவில்லை என்பதுதான் கரூர் அதிமுகவினர் முன்வைக்கும் கேள்வியாக உள்ளது.

தினகரனுக்கும் ஸ்டாலினுக்கும் மறைமுகமாகக் கூட்டு இருப்பதாக பதினெட்டு எம்எல்ஏக்கள் கவர்னரிடம் மனு கொடுத்தது முதலே அதிமுகவினர் விமர்சனம் செய்துவருகிறார்கள். மதுரையில் ஸ்டாலினும் தினகரனும் ஒரே ஹோட்டலில் தங்கியபோதும் அதிமுகவினர் தங்கள் விமர்சனத்துக்கு அதை உதாரணமாக்கிக்கொண்டார்கள். செந்தில் பாலாஜியை தினகரனே திமுகவுக்கு அனுப்பி வைத்ததாகவும் அதிமுகவினர் கூறிவருகிறார்கள். 
இந்தச்சூழலில் கரூர் இணைப்பு விழாவில் தினகரனை பற்றி ஸ்டாலினும் செந்தில் பாலாஜியும்   ஒரு வார்த்தைக்கூட விமர்சித்து பேசாததன் மூலம், தினகரனையும் ஸ்டாலினையும் விமர்சித்து பேசுவதற்கு வாசலை திறந்துவிட்டிருக்கிறார்கள். கரூரில் என்னதான் நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்ப்போமே!