மோடி அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளை விட மிக மிக மோசமாக விமர்சித்த ஒரு நபர் என்றால் சமீப காலத்தில் அது அ.தி.மு.க. எம்.பி.யும், நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரைதான். 

ஆனால் கடந்த சில நாட்களாக இந்த விஷயத்தில் அந்தர் பல்டி அடித்துக் கிடக்கிறார் மனிதர். அவருடைய ஆவேசத்தையெல்லாம் பார்த்து அதிர்ந்து நின்ற மோடி துவேஷிகள், ‘வாய்ப்பு கொடுத்தல் தேர்தலில் நிற்க தயார்’ என்று அவர் அடித்திருக்கும் குட்டிக்கர்ணத்தையும், தொடர்ந்து பி.ஜே.பி.யை எதிர்க்காதிருக்கும் நிலையையும் கண்டு கேவலமாய் விமர்சிக்கிறார்கள். 

இவர்களிடம் வறுபடுவது ஒரு புறமிருக்க, சமீப காலமாக தன் சொந்த தொகுதியான கரூரில் தாறுமாறான தாளிப்புக்கு உள்ளாகிறார் தம்பி. அவரை அப்படி வெளுத்தெடுப்பது யார் தெரியுமா? சாட்ஸாத் அ அவரது தொகுதிவாசிகளேதான். 

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் தண்ணீர்ப்பஞ்சம் போட்டு வாட்டி எடுக்கிறது. இருக்கும் எட்டாயிரம் கிராமங்களில் 90%  தண்ணீரின்றி தவித்துக் கிடக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் பவித்தரம் எனும் கிராமத்துக்கு சென்றிருந்த தம்பிதுரையிடம், அந்த ஊர் பெண்மணி செம்ம வாக்குவாதம் செய்தது சீன் ஆகிவிட்டது....

‘குடிக்க தண்ணியில்லாம தவிக்கிறோம்’- என்று அந்த பெண் கூற,

‘காவிரி கூட்டு குடிநீருக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்காங்க. அந்த திட்டம் தொடங்கியதும் தண்ணீர் கிடைக்கும்.’ என்று தம்பிதுரை சொல்ல,

‘அந்த திட்டம் வர்றது இருக்கட்டும். இப்போதைக்கு போர் போட்டுக் கொடுங்க.’ என்று அந்த லேடி மடக்க, 

‘போர் எங்கே போடணும்?’ என்று தம்பிதுரை ஆதங்கத்துடன் கேட்க,

‘நீங்கதான் அதை முடிவு பண்ணோணும்.’ என்று அந்த லேடியும் மல்லுக்கு நிற்க, 

‘நானென்ன ஜியாலஜியா படிச்சிருக்கேன். போர் எங்கே போடணும், தண்ணீர் எங்கே வருமுண்ணு ஆராய்ச்சி பண்றதுக்கு?’ என்று பொங்கிவிட்டாராம் தம்பிதுரை. 

அவரது கோபம் பல மணி நேரங்களுக்கும் தீரவில்லையாம். இந்த சம்பவம் நிகழ்ந்து நெடுநேரம் கழித்து கரூரில் நடந்த ஒரு விழாவின் போதும் ‘ஒரு பெண் பவித்தரத்தில் என்னை பார்த்து கேட்கிறார்...’ என்று ஆரம்பித்து கோபமும், எரிச்சலும் ஒன்று சேர புலம்பியிருக்கிறார். 

கரூர் அ.தி.மு.க.வினர் மத்தியில் இந்த விவகாரம் பெரிய பரபரப்பாகிவிட்டது. வரவர தனக்கு மரியாதை இல்லை தொகுதியில்! என அவர் நினைப்பதாக சொல்லி மண்டை காய்கிறார்கள். 

இதற்கிடையில், மக்களுக்கு தண்ணீரை கொடுக்காமல் வெறும்  வாதம் செய்யும் தம்பிதுரை இனி எங்கே சென்றாலும் அவரிடம் இதேபோல் எடக்கு மடக்காக கேள்விகேட்டு வாதம் செய்யும் முடிவில் இருக்கின்றன கரூர் கிராமங்கள். இதன் பின்னணியில் முழுமையாக செந்தில்பாலாஜியின் கரம் இருக்கிறதாம்.