மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன் யார் கூட்டணி சேர்ந்தாலும் அவர்கள் படுதோல்வி அடைவார்கள் என்றும், தற்போது அவரது கருப்புத் துண்டு ஆப்ரேஷனில் திமுக செயல் தலைவர் கவிழ்ந்து விடுவார் என்றும் அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன்  கிண்டல் செய்துள்ளார்

ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளையொட்டி மன்னார்குடியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. செய்தி தொடர்பாளருமான வைகைசெல்வன் ,  புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் கமலஹாசன் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன் என கூறுகிறார். அவரிடம் கூட்டணி வைக்க இங்கு யாரும் காத்திருக்கவில்லை என குறிப்பிட்டார். ஆன்மிக அரசியல் என்று கூறி, தமிழக மக்களை ரஜினி குழப்பி வருகிறார். இதனை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.டி.டி.வி.தினகரன், ஆர்.கே. நகர் மக்களுக்கு கொடுத்த 20 ரூபாய்  டோக்கனுக்கு இன்னும்  பாக்கி வைத்துள்ளார். தினகரன் கட்சி என்பது பிராய்லர் கோழி போல. நன்றாக வளருமே தவிர, குஞ்சு பொரிக்காது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வெற்றி தினகரனுக்கு கிடைத்த வெற்றி இல்லை. ரூ.20 டோக்கனுக்கு கிடைத்த வெற்றி. தினகரன் ஆரம்பிக்கும் புதிய கட்சிக்கு ‘ஸ்லீப்பர் செல் கழகம்’ ‘கரன்சி கழகம்’, என்று பெயரை வைத்து கொள்ளலாம். தினகரனிடம் இருப்பவர்கள் அதிருப்தியாளர்கள் தான் என்றும் அவர் குறிப்பிட்டார்..

ரஜினி வாடகை பாக்கி வைத்துள்ளார். கமல், நடிகை கவுதமிக்கு சம்பள பாக்கி வைத்துள்ளார். தினகரனும் ஆர்.கே. நகர் மக்களுக்கு 20 ரூபாய் டோக்கன் பாக்கி வைத்துள்ளார். இதனால் பாக்கி வைத்துள்ளவர்களுக்கு எல்லாம் வருகிற தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என கிண்டல் செய்துள்ளார்.

வருகிற தேர்தலில் அதிமுகவினர்  மு.க.ஸ்டாலினை பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை. அவரை ‘கருப்பு துண்டு ஆபரேசன்’ மூலம் வைகோவே பார்த்துக் கொள்வார் மிகக் கடுமையாக பேசினார்.