சென்னை-காவேரி மருத்துவமனை வாசலில் வாரக் கணக்கில் கூடி நின்ற தொண்டர்களும் பொதுமக்களும், “எழுந்து வா தலைவா.. எழுந்து வா..” என தலைவர் சிகிச்சை பெற்று வந்த நான்காவது மாடிக்கே எதிரொலிக்கும் வகையில் எழுப்பிய முழக்கங்கள், தேம்பி அழுத ஒலியாக மாறிய நாள். எழுந்து வந்துவிடுவார் என்ற நம்பிக்கை முழக்கங்கள் தேய்ந்து, அல்லல்பட்டு ஆற்றாத கண்ணீர்க் குரல்கள் ஒலிக்கத் தொடங்கிய நாள். 

இனி எதிர்கொள்ளவிருக்கும் களங்கள் அனைத்திலும் வெற்றியினைக் குவித்து தலைவர் கருணாநிதி கால் மலரில் காணிக்கையாக்கிடுவோம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து ‘உங்களில் ஒருவன்’ என்ற பெயரில் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள மடல்:


நெஞ்சத்தில் அரியாசனம் போட்டு அமர்ந்திருக்கும் அன்புத் தலைவரின் முதலாவது ஆண்டு நினைவு தினம், ஆகஸ்ட் 7 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த நாள்தானே, சென்னை-காவேரி மருத்துவமனை வாசலில் வாரக் கணக்கில் கூடி நின்ற தொண்டர்களும் பொதுமக்களும், “எழுந்து வா தலைவா.. எழுந்து வா..” என தலைவர் சிகிச்சை பெற்று வந்த நான்காவது மாடிக்கே எதிரொலிக்கும் வகையில் எழுப்பிய முழக்கங்கள், தேம்பி அழுத ஒலியாக மாறிய நாள். எழுந்து வந்துவிடுவார் என்ற நம்பிக்கை முழக்கங்கள் தேய்ந்து, அல்லல்பட்டு ஆற்றாத கண்ணீர்க் குரல்கள் ஒலிக்கத் தொடங்கிய நாள்.


அமைதிப் பேரணிக்கு அலைகடலெனத் திரண்டு வருக உடன்பிறப்புகளே! ஒவ்வொரு மாவட்டக் கழகத்திலிருந்தும் அவற்றிற்குட்பட்ட ஒன்றிய-நகர-பேரூர்-கிளைக் கழகங்களிலிருந்தும் "ஆகஸ்ட் 7" அன்று , திசையெலாம் திணறிட, பெருந்திரளாகச் சூழ்ந்து வந்து பேரணியில் கலந்துகொள்ள வேண்டுமெனக் கனிவன்புடன் அழைக்கிறேன். ஆகஸ்ட் 7 அமைதிப் பேரணிக்குப் பிறகு, தலைவர் தனது மூத்த பிள்ளையென காலமெலாம் வளர்த்தெடுத்த - கழகத்தின் எழுத்தாயுதமாம் "முரசொலி" அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள, அவரது திருவுருவச் சிலையினை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில், மேற்கு வங்க மாநில முதல்வர் மாண்புமிகு மம்தா பானர்ஜி திறந்து வைக்கும் இனிய நிகழ்வு ஆகஸ்ட் 7 அன்று மாலை 5 மணியளவில் நடைபெறவிருக்கிறது.


கலைஞரின் அந்த திருவுருவச் சிலை திறப்பு விழா பொதுக்கூட்டம் மாலை 5.30 மணியளவில் இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில், உங்களின் ஆர்த்தெழும் பங்கேற்புடன் நடைபெறவிருக்கிறது. இப்பொதுக் கூட்டத்தில், மேற்கு வங்க முதல்வருடன், ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். 
ஆண்டு முழுவதும் நமது நினைவுகளில் நின்று-நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் தலைவர் கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாளான ஆகஸ்ட் 7 அன்று கழக உடன்பிறப்புகள் சென்னை நோக்கித் திரண்டிட அழைக்கிறேன்! அவர் வழியில் திமுகழகம் எனும் பேரியக்கத்தைக் காத்து, இனி எதிர்கொள்ளவிருக்கும் களங்கள் அனைத்திலும் வெற்றியினைக் குவித்து அவர்தம் கால்மலரில் காணிக்கையாக்கிடுவோம்” மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.