திமுக தலைவரும், முன்னால் முதலமைச்சருமான கருணாநிதியின் உயிர் சரியாக 6:10 மணியளவில் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

ஏற்கனவே நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், 24 மணி நேரத்திற்கு பிறகே எதுவும் கூற முடியும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கடந்த 2 வருடங்களாக வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், இடையில் உடல் நிலையில் நல்ல முனேற்றம் அடைந்து, முரசொலி அலுவலகம், அண்ணா அறியாலயம் உள்ளிட்ட இடங்களுக்கு வருகை கொடுத்தார்.

மேலும் கடந்த ஜூன் 3 ஆம் தேதி பிறந்த நாள் அன்று, தன்னுடைய தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிறுநீரக தொற்று காரணமாக கருணாநிதிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரது வீட்டிலேயே தொடர்ந்து மருத்துவர்கள் இவருக்கு சிகிச்சை அளித்து  வந்த நிலையில், உடல் நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டதால் காவேரி மருத்துவமையில் இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 27 ஆம் இவருக்கு உடல்நிலையில் சிறு பின்னடைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மருத்துவர்கள் கொடுத்த தீவிர சிகிச்சையால் மீண்டும் உடல் நிலை சீரானது. 

இந்நிலையில் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில், கருணாநிதியின் உடல் உறுப்புகளை இயங்க வைப்பது மிகவும் சவாலாக உள்ளதாகவும். எதுவும் 24 மணிநேரத்திற்கு பிறகே கூற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சரியாக 6:10 மணியளவில், கருணாநிதியின் உயிர் பிறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அப்போது முடிந்த வரை மருத்துவ ரீதியாக கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் ஆனால் அவரின் வயது மூப்பு காரணமாக, சிகிச்சை வீணானதாக கூறப்பட்டுள்ளது. 

கருணாநிதி காலமானார் என்கிற தகவல் வெளியானதும், காவேரி மருத்துவமனை வளாகம் முன்பு கூடி இருந்த தொண்டர்கள், தலையில் அடித்துக்கொண்டும், கீழே விழுந்தும், அழுது புரண்டு வருகிறார்கள்.