திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நேற்று மிகவும் மோசமடைந்து, சிகிச்சைக்கு பின்னர் சீரானது. அதைக்கண்டு மருத்துவர்களே வியந்தனர். கருணாநிதியை கண்டு மருத்துவர்கள் வியப்பது இது முதன்முறையல்ல.

கருணாநிதி மருத்துவர்களுக்கு வியப்பை ஏற்படுத்துபவராகவே இருந்துவந்துள்ளார். நேற்று மாலை 5.30 மணியிலிருந்து 7 மணி வரை அவரது உடல்நிலை மோசமானது. நாடித்துடிப்பு 35 வரை இறங்கியது. அதனால் அவரை காப்பாற்றுவது கடினம் என்றே மருத்துவர்கள் கருதியுள்ளனர். ஆனால் சிகிச்சைக்கு பிறகு 8 மணியளவில் கருணாநிதியின் உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்த வயதில் அவரது உடல்நிலை சிகிச்சையை ஏற்றுக்கொள்வதும், உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்பியதும் மருத்துவர்களுக்கே வியப்பை ஏற்படுத்தியது. 

இதற்கு முன் ஒருமுறை நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி, கருணாநிதியின் மூளையின் செயல்பாடுகள் குறித்து வியப்பு தெரிவித்துள்ளார். பொதுவாக மனித மூளையின் செயல்பாடுகள் இடது மற்றும் வலது என இரண்டு பகுதிகளை அடிப்படையாக கொண்டு செயல்படும். சில செயல்பாடுகள், இடது பக்கத்தாலும், மற்ற செயல்பாடுகள் மூளையின் வலது பக்கத்தாலும் கட்டுப்படுத்தப்படும். 

மூளையின் செயல்பாடுகளை பொறுத்தே திறமைகளும் அமைகின்றன. கருணாநிதியை பொறுத்தவரை வசனம், திரைக்கதை, நாடகம், கவிதைகள், பாடல்கள், சிறுகதை ஆகியவை எழுதுவதில் சிறந்து விளங்கினார். ஆட்சி பொறுப்பில் இருந்தபோதும் தனது எழுத்துப்பணியை தொடர்ந்து செய்துவந்தார். 

இதுதொடர்பாக ஒருமுறை கருத்து தெரிவித்த பிரபல நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி, ஆளும் திறமை என்பது மூளையின் இடதுபக்கம் தொடர்புடையது. அதேநேரத்தில் காவியம், கற்பனை உள்ளிட்ட கலைத்திறமை என்பது மூளையின் வலதுபக்க தொடர்பானது. பொதுவாக மனிதர்களுக்கு இரண்டில் ஒன்று தான் மேன்மையாக இருக்கும். ஆனால் கருணாநிதிக்குத்தான் இரண்டுமே சிறப்பாக செயல்படுகிறது என கூறி வியந்தார். 

இவ்வாறு மருத்துவர்களுக்கு இன்றைக்கு அல்ல.. எப்போதுமே புரியாத புதிராக வியப்பை ஏற்படுத்தியவர் கருணாநிதி.