புதுச்சேரியில் 2020 -21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பல்வேறு நலத்திட்டங்களையும் புதிய அறிவிப்புகளையும் முதல்வர் நாராயணசாமி வெளியிட்டார். அதில், புதுச்சேரியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டமும் ஒன்று. இந்தத் திட்டத்துக்கு கலைஞர் கருணாநிதி காலை சிற்றுண்டி திட்டம் என்று பெயரிட்டு தொடங்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். இத்திட்டம் நவம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கும் என்றும் காலையில் இட்லி, பொங்கல், கிச்சடி ஆகியவை வழங்கப்படும் என்றும் நாராணயசாமி அறிவிப்பை வெளியிட்டார்.


கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் நாராயணசாமி அறிவிப்பை வெளியிட்டதை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சியும் வரவேற்பும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில், “‘புதுவையின் புரட்சி முதல்வர்' நாராயணசாமி, முத்தமிழறிஞர் கலைஞர் பெயரால் பள்ளி மாணவர்க்கு சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். கலைத் தொண்டு மூலமாக 'கலைஞர் கழகம்' வளர்த்த மாநிலத்தில் அவர் பெயரால் ஒரு திட்டம் தொடங்கி இருப்பது பெரு மகிழ்ச்சிக்குரியது.


தனது செயலின் மூலம் கோடானுகோடி திமுக தொண்டர்கள் மனதில் இடம்பெற்றுவிட்டார் முதல்வர் நாராயணசாமி! வாழ்க அவர் புகழ்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.